Thursday, 19 June 2014

"பன்றி இறைச்சி தடை ஏன்?" _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 19.06.2014 அன்று  சகோ.இஸ்மாயில்  அவர்கள் "பன்றி இறைச்சி தடை ஏன்?"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பன்றியை உண்ணத் தடை

இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.
இதற்கான காரணத்தை திருக்குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை.
மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.
இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். சாக்கடையில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பன்றியும் உண்ண அனுமதிக்கப்படவைல்லை.
எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப்பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. ஆயினும், பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.
100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.
சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.
மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும் போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது.
ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.
இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும் போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது.
பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.
இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 19.06.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். இஸ்மத்துல்லாஹ் அவர்களுக்கு  ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.

"ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 19.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன

24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.
(இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)
கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதில் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப்பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை.
சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டபோது, ஒரு பனைமரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனைமர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆர்ப்பரித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன.
சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரைக்கு அருகில் கடலில் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
கடலின் ஆழத்திலும் பிரமாண்டமான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனைமர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
ஆழ்கடலுக்கு உள்ளேயும் பேரலைகள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.

பிறமத சகோதரிக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _ மங்கலம் R.P. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் 18.06.2014 அன்று பிறமத சகோதரி.  அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.