Wednesday, 28 May 2014

"வசீலா என்பது என்ன? " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 28.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "வசீலா என்பது என்ன?  " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

141. வஸீலா என்பது என்ன?

இவ்வசனத்தில் (5:35) "இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று கூறப்படுகிறது.
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக உள்ளது என்பர்.
அல்லாஹ்வின் பால் நெருங்குவதற்கான சாதனமாக தொழுகை, பொறுமை இன்ன பிற வணக்கங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. ஒரு நபர் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. வஸீலா என்பதற்கு இடைத்தரகர் என்ற பொருளும் கிடையாது.
அல்லாஹ்விடம் நாம் எதையும் கேட்பது என்றால் அவனது கட்டளைகளை நிறைவேற்றி விட்டு, அவனுக்காக ஒரு வணக்கத்தை நிறைவேற்றி விட்டு அவனிடம் கேட்க வேண்டும். அந்த நல்லறத்தை வஸீலாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தேயன்றி நல்லடியார்களின் சமாதிகளில் போய்க் கேளுங்கள் என்பது இதன் பொருள் அல்ல.
இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள இந்த வசனத்திலேயே சான்று உள்ளது. எப்படியென்று பார்ப்போம்.
நம்பிக்கையாளர்களே! என்று இவ்வசனம் துவங்குகிறது. இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் மற்றும் யுக முடிவு நாள் வரை வரக்கூடிய எல்லா முஸ்லிம்களும் அடங்குவர்.
முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வசனத்தில் மூன்று கட்டளைகளை அல்லாஹ் பிறப்பிக்கிறான்.
முதல் கட்டளை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்பதாகும். இந்தக் கட்டளை நமக்கு மட்டுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இக்கட்டளையின் படி இறைவனை அஞ்சியாக வேண்டும். அஞ்சினார்கள்.
இரண்டாவது கட்டளை அல்லாஹ்வின் பால் வஸீலா தேடுங்கள் என்பதாகும். இக்கட்டளையும் எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதாகும்.
வஸீலா என்பதற்கு நல்லறங்கள் என்று பொருள் கொண்டால் நல்லறங்கள் செய்யுங்கள் என்ற கட்டளையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை விட சிறப்பாக நிறைவேற்றியுள்ளதால் பொருந்திப் போகிறது.
வஸீலா என்பதற்கு நல்லடியார்களைப் பிடித்துக் கொள்வது என்று பொருள் கொண்டால் இந்தக் கட்டளை நபிகள் நாயகத்துக்கும் இன்னும் பல நல்லடியார்களுக்கும் பொருந்தாமல் உள்ளது.
"முஹம்மதே! அல்லாஹ்வின் பால் வஸீலாவைத் தேடுங்கள்'' அதாவது ஒரு நல்லடியாரைத் தேடுங்கள் என்று பொருள் கொண்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் பெரியாரை வஸீலாவாக ஆக்கினார்கள்? என்ற கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்
இவர்கள் எந்த மகானிடம் வஸீலா தேடுகிறார்களோ அந்த மகான்களுக்குக் கூட இந்தக் கட்டளை உள்ளது. அந்த மகான்கள் யாரை வஸீலாவாக்கினார்கள்? யாரையும் அவர்கள் வஸீலாவாக ஆக்கவில்லையென்றால் இந்தக் கட்டளையை அவர்கள் மீறிவிட்டார்களா?
எனவே வஸீலாவுக்கு இடைத்தரகர் என்று பொருள் கொள்வது உளறலாக இருக்குமே தவிர அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.
நாம் ஒரு மனிதரிடம் உதவி தேடிப் போகிறோம். நான் உங்களின் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றேனே எனக்காக உதவக் கூடாதா? என்று கேட்டால் இதில் அர்த்தம் இருக்கிறது.
"இப்ராஹீம் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்ததால் எனக்கு உதவுங்கள்'' என்று கேட்டால் நம்மைப் பைத்தியக்காரனாகத் தான் அவர் கருதுவார். "இப்ராஹீம் என் சொல்லைக் கேட்டு நடந்தால் அவருக்கு நான் உதவுவேன். அவர் நல்லவராக இருந்ததற்காக உனக்கு ஏன் உதவ வேண்டும்'' என்று கேட்பார்.
"இன்னார் பொருட்டால் இதைத் தா'' என்று இறைவனிடம் இவர்கள் கேட்பதும் இது போன்ற உளறலாக உள்ளது.
"நபிகள் நாயகத்துக்காக எனக்கு இதைத் தா'' என்று அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ்வுக்குக் கோபம் வராதா? "நபிகள் நாயகத்துக்காக உனக்கு ஏன் தர வேண்டும்! நீ எனக்கு என்ன செய்தாய்?'' என்று அல்லாஹ் கேட்க மாட்டானா? சாதாரண மனிதனுக்குப் புரிவது கூட அல்லாஹ்வுக்குப் புரியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.
ஒருவர் நல்லவராக இருப்பதைச் சுட்டிக்காட்டி இன்னொருவர் உதவி கேட்பதை விட மடமை எதுவும் இருக்க முடியாது. நம்மிடம் அப்படி யாரேனும் கேட்டால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. ஆனால் அல்லாஹ்விடம் இப்படிக் கேட்டால் அவனுக்குக் கோபம் வராது என்று நம்புகிறார்கள். இதை விட அல்லாஹ்வின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் வேறு இருக்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தின் கப்ரில் போய் வஸீலா தேடவில்லை. நபிகள் நாயகத்தின் பொருட்டால் இறைவனிடம் துஆச் செய்யவுமில்லை.
எனவே வஸீலா தேடுங்கள் என்ற இறைவனின் கட்டளையைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டால் இவ்வாறு வாதிட மாட்டார்கள். இது அல்லாஹ்வின் கன்னியத்தைக் குறைக்கும் செயல் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.
மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் (17:57) தெளிவாகவே கூறுகிறது. வஸீலா என்பது நல்லறம் தான் என்ற கருத்தை இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது.
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளைக் காண்க!

"சமூகதீமைகள்" _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை யின் சார்பாக 27.05.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சாஹிது ஒலி அவர்கள் "சமூகதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"மறைவான ஞானம் " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "மறைவான ஞானம் " எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

"மறுமை வெற்றிக்காக வாழ்வோம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 27.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சதாம் உசேன் அவர்கள்  "மறுமை வெற்றிக்காக வாழ்வோம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....