Monday, 16 June 2014
"எழுதமுடியாத அல்லாஹுவின் வார்த்தைகள் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 16.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "எழுதமுடியாத அல்லாஹுவின் வார்த்தைகள் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்
அல்லாஹ்வின் வார்த்தைகள் – கலிமாத்துல்லாஹ் – என்ற சொல் திருக்குர்ஆனில் நான்கு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன்
முந்தைய வேதங்கள்
லவ்ஹூல் மஹ்ஃபூல் எனும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவை
ஒவ்வொரு விநாடியும் அல்லாஹ்விடமிருந்து புறப்பட்டு வரும் கோடிக்கணக்கான கட்டளைகள்
நான்காவது பொருள் தரக்கூடிய வசனங்களில் கலிமாத்துல்லாஹ் என்பதற்கு வார்த்தைகள் என்று பொருள் செய்யாமல் கட்டளைகள் என்று மொழிபெயர்த்துள்ளோம்.
6:115, 8:7, 10:64, 10:82, 18:109, 31:27, 42:24 ஆகியன அந்த வசனங்களாகும்.
திருக்குர்ஆன் 18:109, 31:27 வசனங்களில் "அல்லாஹ்வின் வார்த்தைகளை எழுத கடல் நீர் அளவுக்கு "மை' இருந்தாலும், அது போல் இன்னும் ஏழு கடல்கள் அளவுக்கு மை இருந்தாலும் போதாது'' எனக் கூறப்படுகிறது. இவ்வசனங்களைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர். அதாவது, திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிட கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும் எழுதி முடியாது என்பது அவர்களின் விளக்கம்.
இவ்விளக்கம் முற்றிலும் தவறாகும். திருமறைக் குர்ஆனை மக்கள் விளங்குவதற்கு எளிதாக இறைவன் ஆக்கியிருக்கிறான். கடல் நீர் அளவுக்கு உள்ள மைகளால் எழுதுமளவுக்கு குர்ஆனை இறைவன் கடினமானதாக வழங்கவில்லை.
ஒவ்வொரு விநாடி நேரத்திலும் இறைவனிடமிருந்து புறப்படுகின்ற கோடிக்கணக்கான கட்டளைகளே இங்கே இறைவனின் வார்த்தைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
ஒரு விநாடி நேரத்தில் ஒரே ஒரு மனிதனுக்கு இடப்படுகின்ற கட்டளைகளே பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவனுடைய ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கம், உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கம், உள்ளுறுப்புகளின் இயக்கம் என கோடிக்கணக்கான இயக்கங்கள் ஒரு மனிதனிடம் ஒரு விநாடி நேரத்தில் நடக்கின்றன. இதற்கான கட்டளைகள் யாவும் இறைவனிடமிருந்து தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளன.
ஒரு மனிதனுக்கு ஒரு விநாடி நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றால் அகிலத்தில் நடைபெறுகின்ற கோடானுகோடி நிகழ்வுகளுக்கு இறைவன் பிறப்பிக்கின்ற கட்டளைகளை எழுதுவதாக இருந்தால் உண்மையிலேயே ஏழு கடல்கள் மையாக இருந்தாலும் போதாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
Subscribe to:
Posts (Atom)