Saturday, 21 June 2014
"உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்" உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "உயிர்களை கைப்பற்றும் வானவர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்
"மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற "இஸ்ராயீல்' என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; என்று பரவலாக நம்புகிறார்கள்.
ஆனால் "இஸ்ராயீல்' என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.
ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் தனித்தனியான வானவர்கள் இருப்பதாக 32:11 வசனம் கூறுகிறது.
அதிகமான மக்களைப் பற்றி பன்மையாகப் பேசும் போது "அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள்'' என்று பன்மையாகவே கூறப்படுகிறது. இதை 4:97, 6:93, 8:50, 16:28, 16:32, 47:27 ஆகிய வசனங்களில் காணலாம்.
நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று 6:61, 7:37 வசனங்களிலும் பன்மையாகக் கூறப்படுவதைக் காணலாம்.
"அனைவருடைய உயிரையும் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் தான் இருக்கிறார்' என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரையிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.
ஒரு வானவர் உலகத்திலுள்ள அனைவருடைய உயிர்களையும் கைப்பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27, 79:2)
Thursday, 19 June 2014
"பன்றி இறைச்சி தடை ஏன்?" _ யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

பன்றியை உண்ணத் தடை
இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.
இதற்கான காரணத்தை திருக்குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை.
மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.
இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். சாக்கடையில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பன்றியும் உண்ண அனுமதிக்கப்படவைல்லை.
எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப்பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. ஆயினும், பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.
100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.
சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.
மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும் போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது.
ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.
இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும் போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது.
பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.
இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
"ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 19.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன
24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.
(இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.)
கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதில் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப்பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை.
சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டபோது, ஒரு பனைமரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனைமர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆர்ப்பரித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன.
சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல் நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடற்கரைக்கு அருகில் கடலில் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது.
கடலின் ஆழத்திலும் பிரமாண்டமான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனைமர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
ஆழ்கடலுக்கு உள்ளேயும் பேரலைகள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.
Wednesday, 18 June 2014
"பரிந்துரை பயன் தருமா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 18.06.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "பரிந்துரை பயன் தருமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பரிந்துரை பயன் தருமா?.
பரிந்துரை பயன் தருமா?.
மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
1. அறவே பரிந்துரை கிடையாது.
2. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.
3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு.
இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.
திருக்குர்ஆன் 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48 ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.
பரிந்துரை இல்லை என்ற கருத்தில் சில வசனங்களும், பரிந்துரை இருக்கிறது என்ற கருத்தில் சில வசனங்களும் உள்ளன. இருந்தாலும் முரண்பட்ட இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் பரிந்துரைக்கு சில நிபந்தனைகள் உள்ளன என்று கூறும் வசனங்களும் உள்ளன. இவ்வசனங்கள் இந்த முரண்பாட்டை நீக்குகின்றன.
அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்? (திருக்குர்ஆன் 2:255)
அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. (திருக்குர்ஆன் 10:3)
ஆகிய வசனங்களில் இருந்து இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம். இறைவன் இதற்கு அனுமதியளிக்க மாட்டான் என்றால் இவ்வாறு கூற மாட்டான்.
அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 21:28)
ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர் அல்லர். (திருக்குர்ஆன் 19:87)
அவன் யாருக்கு அனுமதி அளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 20:109)
அவன் யாருக்கு அனுமதி அளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 34:23)
சத்தியத்துக்குச் சாட்சி கூறியவர்கள் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளராக மாட்டார்கள். (திருக்குர்ஆன் 43:86)
தான் நாடியவருக்கு அல்லாஹ் அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது. (திருக்குர்ஆன் 53:26)
சிலருக்குப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
குர்ஆனைப் பற்றி போதிய அறிவு இல்லாத ஒரு சிறு கூட்டத்தினர் மறுமையில் பரிந்துரை இல்லை எனக் கூறுகின்றனர். அது தவறு என்பதற்கு இவ்வசனங்கள் போதிய சான்றாகும்.
எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத்தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.
"என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.
மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே "மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்'' என்று இங்கே வாழும் போது கேட்கக் கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.
மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணைவைப்போர் ஆனார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 10:18)
யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.
அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும் போது ஒருவரை அழைத்து "இவருக்குப் பரிந்துரை செய்'' என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.
(பார்க்க புகாரி: 99, 335, 448, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளைக் காண்க!
"ரமலானில் நாம் செய்யவேண்டிய நன்மைகள்" தர்பியா நிகழ்ச்சியில் அனுப்பர்பாளையம் கிளை சகோதரர்கள்
தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கி நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில் 8 சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்..
Tuesday, 17 June 2014
"பாதுகாக்கப்பட்ட ஏடு" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 17.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "பாதுகாக்கப்பட்ட ஏடு" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன
உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு இருக்கும். ஒரு இலை உதிர்ந்தாலும் அது எந்த நேரத்தில் விழும் என்ற விபரம் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஏடு லவ்ஹூல் மஹ்ஃபூல் என்று சொல்லப்படுகிறது.
"பதிவுப் புத்தகம்' "பாதுகாக்கப்பட்ட ஏடு' "மறைக்கப்பட்ட ஏடு' "தெளிவான ஏடு' என்ற வார்த்தைகளாலும் இந்தப் பதிவுப்புத்தகம் குறிப்பிடப்படுகிறது.
ஒருமனிதன் நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக வாழ்வதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடிதான் நடக்கிறது. ஒருவன் பிறப்பதும் மரணிப்பதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. ஒருவன் செல்வந்தனாவதும் ஏழையாவதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன.
6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 36:12, 43:4, 50:4, 54:43, 56:78, 57:22, 85:22 ஆகிய வசனங்கள் இது குறித்து பேசும் வசனங்களாகும்.
திருக்குர்ஆன் கூட அவனது பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 85:21-22, 56:77-78)
எல்லாமே பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன என்றால் மனிதனுக்கு சுதந்திரம் கிடையாதா? ஒருவன் கெட்டவனாக இருப்பதும் விதிப்பலகையில் எழுதியபடிதான் நடக்கின்றன என்றால் அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்று இதில் கேள்விகள் எழுகின்றன.
இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ள 289வது குறிப்பை வாசிக்கவும்.
158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?
இந்த வசனங்களில் (6:47, 46:35) அல்லாஹ்வின் தண்டனை வரும் போது அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று கூறப்படுகிறது.
அதாவது அல்லாஹ்வின் தண்டனை வரும்போது கெட்டவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்படுவார்கள். நல்லவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
ஆனால் புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற துன்பங்கள் நேரும் போது, அந்தத் துன்பங்களில் தீயவர்கள் மாத்திரமின்றி நல்லவர்களும் கூட பாதிக்கப்படுகிறார்கள். அப்படியானால் இந்த வசனங்கள் நடைமுறை நிகழ்வுகளுக்கு எதிராக இருக்கிறதே என்று சிலருக்குத் தோன்றலாம்.
இந்த இரு வசனங்களும் பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்கள், சோதனைகள் பற்றி பேசவில்லை. மாறாக இறைத்தூதர்கள் அனுப்பப்படும் பொழுது அந்த இறைத்தூதர்களை எதிர்த்த சமுதாயத்திற்கு வேதனை வருமானால் நல்லவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து விட்டு தீயவர்களை மாத்திரம் தான் அல்லாஹ் அழித்திருக்கிறான். அதைத்தான் இவ்வசனங்கள் சொல்கின்றன.
திருக்குர்ஆன் 46:35 வசனத்தில் இதைத் தெளிவாகவே அல்லாஹ் சொல்கின்றான்.
"தூதர்களில் உறுதிமிக்கவர்கள் பொறுமையை மேற்கொண்டது போல் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அவசரப்படாதீர்!' என்று சொல்லி விட்டு "அழிவு வரும் போது பாவிகள் மாத்திரமே அழிக்கப்படுவார்கள்' என்று கூறுகிறான்.
இப்படித்தான் நூஹு நபி, லூத் நபி, ஹூத் நபி, ஸாலிஹ் நபி, மூஸா நபி போன்ற நபிமார்களின் சமுதாயத்தவரில் தீயவர்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு நல்லவர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனர்.
நபிமார்கள் இல்லாத போது வரும் சோதனைகள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல்தான் வந்தடையும். அதற்கும், இந்த வசனத்திற்கும் சம்மந்தம் இல்லை.
Subscribe to:
Posts (Atom)