Thursday 2 January 2014

ஜமாஅத் நிர்வாகங்களுக்கு கடிதம்



அல்லாஹுவின் திருப்பெயரால்.....
அன்பிற்கினிய ஜமாஅத் நிர்வாகிகளுக்கு ,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
இந்தக்கடிதம் பூரண உடல் நலத்துடனும், தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் கிடைக்கப்பெற அல்லாஹ்விடம் துவாச் செய்கின்றோம்.
இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கி உள்ளார்கள் என்பது தாங்கள் அறிந்ததே.
இந்திய சுதந்திரத்திற்காக பெருமளவில் பாடுபட்ட நமது முஸ்லீம் சமுதாயம் இன்று சொந்த நாட்டிலேயே பல்வேறு துன்பங்களுக்கும் மத்தியில் தீவிரவாதி என்ற முத்திரையுடன் வாழ்ந்து வருகின்றது.
இவற்றுக்கெல்லாம் காரணம் நம் சமுதாயத்திற்கு கல்விஅறிவு இல்லாததும், அரசு இயந்திரத்தை இயக்கும் அதிகாரிகளாக நாம் இல்லாததும்தான்.
இந்தியாவில் முஸ்லிம்களில் மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார். (வறுமைக்கோடு என்றால் இருக்க இடம் இல்லாமல், ஒருநாளைக்கு ஒருவேளைஉணவுஉண்டு, இரண்டு துணிகளுக்கும்மேல் இல்லாதவர்கள்). இந்தியாவில் தலித்துகள், மலைவாழ் மக்களைவிட அதிகமாக வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்பவர்கள் முஸ்லிம்கள்தான்!
நம் சமுதாயத்தில் பனிரெண்டாம் வகுப்புவரை படித்தவர்கள் வெறும் 4.5% (நான்கரை சதவீதம்) தான். பட்டம் படித்தவர்கள் வெறும் 3.6% தான்.
இவை எல்லாம் நாமாகச் சொல்லவில்லை, மத்திய அரசு அமைத்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை சொல்வதாகும்.
 இவ்வளவு துன்பத்திலும், துயரத்திலும் வாழும் நமது சமுதாயத்திற்கு தீவிரவாதி என்றபட்டம். காவல்துறை நம்முடைய அப்பாவி இளைஞர்களைத் தீவிரவாதி என்று சுட்டுக்கொல்வதும், சிறையில் அடைப்பதும் வாடிக்கையாகிவிட்டன.
இவை அனைத்தையும் மாற்ற நமக்கு இடஒதுக்கீடு வேண்டும்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முஸ்லிம்களின் நிலையை ஆய்வுசெய்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா அவர்கள் முஸ்லிம்களின் இந்த அவலநிலையைப்போக்க முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.இந்த அறிக்கை பாராளுமன்றத்திலும் தாக்கல்செய்யப்பட்டது.
நமக்குத்தான் தமிழகத்தில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளதே, பிறகு எதற்கு மீண்டும் இடஒதுக்கீடு என்று நீங்கள் நினைக்கலாம். நமக்கு தமிழகத்தில் உள்ள 3.5% இடஒதுக்கீடு தமிழக அரசுப்பணியிலும், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களிலும்தான். ஆனால் மத்திய அரசில் இடஒதுக்கீடு கிடைத்தால்தான் நம்மால் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
மத்தியஅரசில் 10% இடஒதுக்கீட்டில் கிடைக்கும் நன்மைகள்.
இந்தியாவையே ஆளக்கூடிய பதவிகளான கலெக்டர், போலீஸ் கமிஷனர், உளவுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியபதவிகளில் முஸ்லிம்கள் 10ல் ஒருவர் இருக்கமுடியும்.
இந்தப் பணிகளில் நாம் இருந்தால்மட்டுமே நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக்கமுடியும், குஜராத்திலும் கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தத்துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிகக்குறைவாகஇருப்பதே) காரணம்.
சமுதாய முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் நாம் காவல்துறை ஆணையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக்கமுடியும். சமுதாய முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் கட்டாயம் நாம் இந்தத்துறைகளில் 10% இடஒதுக்கீடு வாங்கியேஆகவேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், சுங்கத்துறை (கஸ்டம்ஸ்), இரயில்வே துறை, வெளிநாட்டுத் தூதர்கள், மற்றும் இஸ்ரோ போன்ற அனைத்துத் துறைகளிலும் பத்துப்பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கமுடியும்.
இடஒதுக்கீடு தவிர முஸ்லிம் மாணவர்களுக்கு வட்டி இல்லாக்கடன் உதவி, கல்விக்கட்டணங்களைக் குறைப்பது, ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தருவது போன்றவைகளையும் நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால் மத்திய அரசு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டது. 10% இடஒதுக்கீடு கிடைக்கும் எனநம்பிய நம்மை ஏமாற்றிவிட்டது. முதல் கட்டமாக பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் டெல்லியில்பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து ரங்கநாத்மிஸ்ரா அறிக்கையை அமல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் பிரதமர்இதுவரை ஒன்றும் செய்யவில்லை.இனி நாம் அடுத்த கட்டமாக மக்கள்சக்தியைத் திரட்டி, ஓட்டு அரசியல் நடத்தும் இவர்களுக்கு உரக்கச் சொன்னால்தான் 10% இடஒதுக்கீடு கிடைக்கும்.
தமிழகத்திலும் நாம் அவ்வாறுதான் இடஒதுக்கீடுபெற்றோம். கும்பகோணத்திலும், ஜுலை-4ல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களின் பிரம்மாண்டமான பேரணிகளையும் மாநாடுகளையும் பார்த்து முஸ்லிம்களின் ஓட்டுப்போய்விடும் என்ற பயத்தில் இடஒதுக்கீடு தந்தனர்.
இந்த வெற்றி ஃபார்முலாவை நாம் மத்தியஅரசிடமும் காட்டினால் நிச்சயம் மத்தியிலும் இடஒதுக்கீடு கிடைக்கும்!
இன்ஷாஅல்லாஹ்....
இதன் அடிப்படையில் வரும் ஜனவரி 28 ஆம்தேதி சென்னை, திருச்சி, நெல்லை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% இட ஒதுக்கீடு கோரியும், மாநிலத்தில் உள்ள 3.5 சதவிகிதத்தை 7 ஆக உயர்த்த கோரியும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரியும் மாபெரும் சிறை செல்லும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ளது. இன்ஷாஅல்லாஹ். முஸ்லிம்களின் உரிமையை மீட்க நடக்கவிருக்கும் இந்தப் போராட்டங்களுக்கு தங்கள் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாமல் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் ...
இந்த மாநாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்காக நடத்தப்படும் மாநாடு அல்ல, ஒட்டு மொத்த முஸ்லிம்களும் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. அனைத்துத் தரப்பு முஸ்லிம்களுக்காகவும் நடத்தப்படும் இந்தப்போராட்டத்தில் நாம்அனைவரும் கலந்து கொண்டு அரசுக்கு நமது குரலை உரக்கச் சொல்லவேண்டும். இடஒதுக்கீடு கிடைத்தால் அனைத்துத்தரப்பு முஸ்லிம்களும் பயன் அடைவார்கள்.
கடந்த காலங்களில் வீரியமிக்க பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தி இருந்தும் அரசியல் ஆதாயம் தேடாத அமைப்பு டிஎன்டிஜே. அனைத்து முஸ்லிம்களுக்காகவும் பாடுபடும் அமைப்பு டிஎன்டிஜேதான். கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால் முதலில் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கித் தருவதும், உதவி செய்வதும் டிஎன்டிஜே. கொள்கை வேறுபாடு பார்க்காமல் பல்வேறுநலத்திட்ட உதவிகளை இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக செய்துவரும் டிஎன்டிஜேவின் சேவைகள் தாங்கள் அறிந்ததே.
இரத்ததான சேவையில் முதலிடம் பெற்று பல்வேறு விருதுகளைப் பெற்ற அமைப்பு டிஎன்டிஜே. சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக இதுவரையிலும் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தி உள்ளோம், தொடர்ந்து நடத்திக்கொண்டும் இருக்கின்றோம்.
இன்னும் பல்வேறு உதவிகளையும் கொள்கை வேறுபாடு பார்க்காமல் செய்து வருகின்றோம்.எந்நேரமும் முஸ்லிம் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துவரும் டிஎன்டிஜே எந்தப்பணி செய்தாலும் கூலியைஅல்லாஹ்விடம் மட்டுமே பெறுவோம் என்ற கொள்கையில் உள்ளது.
சுயநலம் இல்லாமல் முழுக்க முழுக்க சமுதாயநலன் கருதியே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. நாங்கள் மாநாடு நடத்தி, கூட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளிடம், சீட்டோ, நோட்டோ வாங்க மாட்டோம் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக்கொன்றும், சிறையில் அடைக்கும் ஆபத்தான வாழ்க்கையை விட்டும், மனைவி மக்களைப்பிரிந்து அயல் நாட்டில் வாழும் அடிமை வாழ்க்கையை விட்டும், இப்படி வாழவழியில்லாமல் இருக்கும் நமது சமுதாயமும், கலெக்டராக, கமிஷனராக, டாக்டராக, பொறியாளராக, நீதிபதியாக மாறுவதற்கு, நாம் நமது நியாயமான கோரிக்கையை அரசுக்குத் தெரிவிக்கவேண்டும். ஒருவராக, இருவராகச் சொன்னால் அரசின் காதுகளுக்குக் கேட்காது. ஒட்டுமொத்தமாக சொன்னால்தான் அரசுகளின் காதுகளுக்குச்செல்லும். ஒருமித்து ஒரேகுரலில் நமது கோரிக்கையை வெல்ல ஜனவரி 28 அன்று சென்னை, திருச்சி, நெல்லை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் நடக்கவிருக்கும் போராட்டக்களங்களுக்கு வருமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நமது நியாயமான கோரிக்கையை அரசுக்கு உரக்கச் சொல்லுவோம், இடஒதுக்கீட்டை வெல்வோம்- இன்ஷாஅல்லாஹ்!
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்.