Monday 14 July 2014

மார்க்கம் அறிவோம் : ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம்...

ஃபித்ரா – பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீதும் இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ‘ஸாவு’ கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரிச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி – 1503)

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்த தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட அளவாகும்.

நமது பகுதியில் உணவுப் பொருள் அரிசியாக உள்ளதால் அதனை வழங்கலாம். அல்லது அதன் பண மதிப்பையும் வழங்கலாம். தாம் உணவிற்குப் பயன்படுத்தும் தரமான அரிசியின் இரண்டரை கிலோ மதிப்பை கணக்கிட்டு, ஒருவர் தமது பராமரிப்பிலுள்ள சிறுவர், பெரியவர் அனைவருக்காகவும் இந்த தர்மத்தை வழங்க வேண்டும்.

ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்த தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

நோன்பாளியிடம் ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஃபித்ரா எனும் தர்மத்தை விதியாக்கினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னு மாஜா 1817)

நோன்பாளிகளுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோரின் சார்பில் வழங்கும்போது உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

ஃபித்ரா கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு இருந்தார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 1530,1509)


ஃபித்ராவை ஒன்று திரட்டி வழங்குதல்

நபி (ஸல்) அவர்கள் ஃபித்ராவை ரமளான் ஜகாத் எனும் பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பே வசூலித்து ஓரிடத்தில் திரட்டி அதனைப் பாதுகாக்க அபூஹுரைரா(ரலி) அவர்களை நியமித்த செய்தியை புகாரியின் 3257 வது ஹதீஸ் மூலம் அறியலாம். இந்தச் செய்தியின் மூலம், பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவை திரட்டியுள்ளார்கள் என்பதையும் அறியலாம்.


எனவே, மேற்கண்ட நபிவழியின் அடிப்படையில் தமிழகத்தில பல வருடங்களாக ஃபித்ரா விநியோகத்தை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை சகோதரர்களிடம் தங்களது ஃபித்ராவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.