Saturday 27 July 2019

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 260719







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரத்தை அறிவித்து, தமிழகம் முழுவதும் மற்றும் அதன் கிளைகள் உள்ள  பகுதிகளில் பலவிதமான பிரச்சாரங்கள் வாயிலாகவும், சமூக நற்பணிகள் மூலமாகவும் தொடர் பிரச்சாரத்தை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 26.07.19 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00மணிக்கு திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது , மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், மற்றும் கோவை. டி.ஏ. அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது அவர்கள் பேசும் போது, அமைதியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி மக்களிடம் தவறான செய்தியாக பரப்பியும், இஸ்லாம் பற்றிய மக்களின் பார்வையை சிதைக்கும் வண்ணம் பல அவதூறுகளையும் கட்டவிழ்த்து மகிழ்கின்றனர் சில விஷமிகள். இதை உடைத்தெரியும் விதமாக, இஸ்லாம் காட்டும் வாழ்வியல் முறைகளை நாம் ஒவ்வோருவரும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ வேண்டும். இஸ்லாம் கூறுவது போல் நன்மையைக் கொண்டு தீமையை அழிக்க வேண்டும் எனவும், இதுபற்றிய விழிப்புணர்வை அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள், இந்த தீவிரவாத எதிர்ப்பு தொடர் பிரச்சாரத்தின் செயல் திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமாக மக்களின் உயிர்காக்கும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் போன்ற சமூக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இஸ்லாமிற்கும் தீவிரவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கி நோட்டீஸ், துண்டுப் பிரசுரம், புக்ஸ்டால் அமைத்தல், இலவசமாக திருக்குர்ஆன் வழங்குதல் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும் மாநில செயலாளர் கோவை டி.ஏ.அப்பாஸ் அவர்கள், ஏற்கனவே நாம் செய்துகொண்டிருக்கும் இப்பணிகளை கிளைகள் இன்னும் துரிதமாக செய்து செயல்பட வேண்டும். இச்செயல்கள் குறித்து கண்காணிக்கப்படும் என கூறினார்.

இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், பொருளாளர் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் யாசர் அராபத், துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீது, ஷேக் பரீத், ரபீக், ஹனிபா மற்றும் மாணவரணிச் செயலாளர் இம்ரான், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், தொண்டரணிச் செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,பேச்சாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்