Saturday, 7 June 2014

"பலி பீடம் " _ உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 07.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "பலி பீடம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

135. பலி பீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா

இவ்வசனங்களில் (5:3, 5:90, 70:43) பலிபீடங்களில் அறுக்கப்பட்டவைகளை உண்ணக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பீடத்தை நட்டி வைத்து அதற்காக அறுத்துப் பலியிடும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. அன்றைக்கு இது தான் வழக்கமாக இருந்ததால் இது மட்டும் கூறப்படுகிறது.
படுக்கையாகப் போடப்பட்ட கற்களானாலும், மரத்தால் செய்யப்பட்ட வழிபாட்டுப் பொருட்களானாலும், உயிருடன் இருக்கின்ற மனிதரானாலும், இறந்தவரின் அடக்கத்தலமானாலும், அவற்றுக்காக அறுத்துப் பலியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றே இவ்வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பொருள் கொள்வதற்கு ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.
அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 427வது குறிப்பைக் காண்க!
 427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!
இந்த வசனத்தில் (108:2) இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை.
ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.
"யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: முஸ்லிம் 5239, 5240, 5241)
"புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் "இல்லை'' என்றேன். "அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?'' என்று கேட்டார்கள். நான் "இல்லை'' என்றேன். "அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அபூதாவூத் 2882)
அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 471 ஆகிய குறிப்புகளைக் காண்க!