Monday, 5 December 2011

நிரந்தர நரகை நோக்கிய பயணம்?



நிரந்தர நரகை நோக்கிய பயணம்?
கப்றும் வைபவங்களும்
==================
நபி (ஸல்) அவர்கள் தம் கப்றை பள்ளியாகத் திருப்பி விடாமலிருக்க (அதில் வைபவங்கள், கூடு, கொடிகள் எடுக்காமலிருக்கச் சொல்லியிருப்பதுடன்) தம் மரணத் தருவாயில் ‘யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்கள் தம் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கி விட்டார்கள்’ என்று கூறியதாக ராவி குறிப்பிடுகிறார். இவர்கள் செய்கின்ற இந்தச் செய்கையைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் ‘இறைவா! என்னுடைய கப்றை அனுஷ்டானங்கள் செலுத்தப்படும் பிம்பமாக ஆக்கி விடாதே! தம் நபிமார்களின் கப்றுகளில் பள்ளி வாசல்களைக் கட்டி வைத்திருக்கும் சில சமூகத்தார்கள் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது’ என்று இமாம் மாலிக் தம் முவத்தா என்ற நூலில் அறிவிக்கிறார்கள்.

இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘நபி ஈஸாவை கிறிஸ்தவர்கள் வரம்பு மீறித் துதித்தது போல என்னை நீங்கள் துதிக்காதீர்கள். நான் ஒரு அடிமை. எனவே என்னைப் பற்றி அல்லாஹ்வின் அடிமை என்றும், அவன் தூதர் என்றும் கூறுங்கள்’ என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘அல்லாஹ்வும், முஹம்மதும் நாடியவை நடக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியவை தான் நடக்கும் என்று கூறுங்கள். அல்லாஹ் நாடியதற்குப் பின்னர்தான் முஹம்மத் நாட முடியும்’.

காட்டரபிகளில் ஒருவர் நபிகளிடம் வந்து ‘நீங்களும், அல்லாஹ்வும் நாடியவை (நடந்தது)’ என்றார். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘என்னை அல்லாஹ்வுக்கு (நிகராக்கி) இணையாக்கி விட்டீர்களா? அல்லாஹ் நாடியது மட்டும் (நடந்தது) என்று கூறும்’. என்றார்கள்.

இதைப்பற்றி இறைவன் திருமறையில் கூறுகிறான்: “நீர் கூறும்! அல்லாஹ் நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறியக் கூடுமாயின் நன்மைகளையே அதிகம் தேடிக் கொண்டிருப்பேன். யாதொரு தீங்கும் என்னை அணுகியிராது”. (7:188)

மற்றொரு இடத்தில் இறைவன் கூறுகிறான்: “நீர் கூறும். அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ, தீமையோ நான் எனக்கே தேடிக் கொள்ள சக்தியற்றவன் (10:49). மேலும் கூறினான்: “நபியே! நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது. மாறாக அல்லாஹ் மட்டும் தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்” (28:56). “நபியே! இவ்விஷயத்தில் உமக்கு யாதொரு அதிகாரமுமில்லை” (3;128)

இதுவே ஏகத்துவத்தின் உண்மை நிலை. அல்லாஹ்விடத்தில் மிக்க மதிப்பிற்கும், பெருமைக்கும், கண்ணியத்திற்குமுரிய நபி (ஸல்) அவர்களின் நிலைமை இப்படி என்றால் வேறு சிருஷ்டிகளின் நிலைமை எப்படி எப்படி என்பதை சிந்தித்திப் பார்க்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

posted by SM.YOUSUF

மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!?


மதுவை அளவாக குடிப்பது இதயத்திற்கு நல்லதா!? 
மது என்பது மனிதனின் அறிவை இழக்க செய்து மிருகமாக மாற்றக் கூடியது. மதுவுக்கு அடிமையாகி விட்டவர்களும் மதுவை விட முடியாதவர்களும் 'நான் மருந்துக்காக பயன்படுத்துகிறேன்' என்று சப்பைக்கட்டு கட்டுவதுண்டு. சில மருத்துவர்கள் மதுவை அளவாக குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறார்கள் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மதுவை அளவாக அருந்தினாலும் அதிகமாக அருந்தினாலும் ஆபத்து தானே தவிர மது ஒரு மருந்து என்பது தவறான கருத்தாகும். இதை அண்மையில் நியூசிலாந்து விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

மதுவை அளவாக குடிப்பது ஆபத்தில்லை என்றும் அவ்வாறு அளவாக குடிப்பது இதய நோய்க்கு மருந்தாகும் என்றும் 1980 களில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது மது உற்பத்தியாளர்களின் ஆதரவின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும் என இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுவை அளவாக குடிப்பது என்பது இதயத்துக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படாத கருத்தாகும். ஆனால் அது இதயத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது என்பது ஆய்வுகளில் அறியப்பட்ட உண்மை. எனவே மது உற்பத்தியாளர்கள் பரப்பிய பொய் செய்திகளை மக்கள் நம்பி விடக் கூடாதென்றும் ஆல்கஹாலில் இருக்கும் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் ஆய்வு செய்து அது முற்றிலும் நன்மையானது எனும் முடிவுக்கு வந்துவிடக் கூடாதென்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது உற்பத்தியாளர்களின் இந்த தவறான தகவலை நம்பி ஆல்கஹால் என்பது டானிக் போன்ற சத்துள்ள உணவு என எவரும் கருதி விடக்கூடாது, அது அதிகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதென்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்ட இந்த உண்மைகளை நியூசிலாந்து பத்திரிகைகளின் மூலம் விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தியதால் மது உற்பத்தியாளர்களுக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துபவருடைய குடும்பம் குட்டிச்சுவராகும் என்பதால் தான் மது பாட்டிலில் கூட குடி குடியை கெடுக்கும் என்ற ஸ்டிக்கரையும் அரசு ஒட்டி விற்பனை செய்கிறது. அதை கண்டுகொள்ளாத குடிமகன்கள், விஞ்ஞானிகளின் ஆய்வின் படி 'மது மருந்தல்ல விஷம்' என்பதை இனியாவது உணர்ந்து மதுவிலிருந்து மீள வேண்டும்.

மது மற்றும் சூதாட்டத்தில் பெரும் கேடும், மக்களுக்கு சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப் பெரியது.
(திருக்குர்ஆன் 2:219)

மதுவில் சிறு பயன்கள் இருந்தாலும் அதிகமான கேடுகள் இருக்கின்றன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் குர்ஆன் மூலமாக அறிவித்துவிட்டதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி : உணர்வு

posted by SM.YOUSUF