இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?
இன்று உலகில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலெல்லாம் யாரும் இஸ்லாத்தை வற்புறுத்திப் பரப்பவில்லை.
இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கை, இந்த அறிவியல் யுகத்திலும் அசைக்க முடியாத அற்புதமாகத் திகழும் அல்குர்ஆன், அதைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்தே அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.
அண்மையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வேய்ன் பர்னல் என்பவர் கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் இஸ்லாத்தில் இணைவதற்குத் தூண்டுகோலாக இருந்தது எது? அவரை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது எது? வாள்முனையா? யாரேனும் ஒருவருடைய வற்புறுத்தலா? அல்லது பணத்தைக் காட்டி இஸ்லாத்திற்கு அழைத்தார்களா?
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் ஹாஷிம் அம்லா என்பவர். இவர் தனது அணி கிரிக்கெட் விளையாடுவதற்காக எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் ஐவேளைத் தொழுகையையும் விடாமல் கடைப்பிடிக்கின்றார். மது வினியோகம் நடைபெறுகின்ற எந்தவொரு விழாவிலும் அவர் பங்கேற்பது கிடையாது. அவருடன் விளையாடும் சக வீரர்கள் மது அருந்துதல் மற்றும் இதர கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது அவர் விலகியே இருப்பார். கேஸ்டல் லேஜர் என்ற பீர் கம்பெனியால் செலவுப் பொறுப்பேற்று வழங்கப்பட்ட ஆடைகளை அவர் அணிய மறுத்து விட்டார். இது எங்களுடைய உள்ளத்தைத் தொட்டு விட்டது என்று அவருடன் விளையாடும் சக வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
வேய்ன் பர்னலை, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஹாஷிம் அம்லா ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது. ஆனாலும் அம்லாவின் மார்க்கப் பிடிப்பு வேய்ன் பர்னலை இஸ்லாத்தின் பால் ஈர்த்துள்ளது என்பதை விளங்க முடிகின்றது.
கிரிக்கெட் விளையாட்டு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல என்றாலும் அதிலுள்ள அனாச்சாரங்களால் அது வரவேற்கத்தக்க விளையாட்டும் அல்ல. இருந்தாலும் அதில் ஈடுபட்ட ஒருவர், மது அருந்தாமல் இருப்பது, தொழுகை உள்ளிட்ட மார்க்க விஷயங்களைக் கடைப்பிடிப்பதே இவ்வளவு ஈர்ப்பைப் பெறுகின்றது என்றால் குர்ஆனை முஸ்லிம்கள் முழுமையாகப் பின்பற்றினால் அல்லாஹ்வின் அருளால் உலகில் மாபெரும் புரட்சி மலர்ந்து விடும்.
சொல் பிரச்சாரம் மட்டுமே மக்களை ஈர்ப்பதில்லை. ஒருவர் மார்க்கத்தைப் பின்பற்றும் அந்தச் செயல்பாடு, அவரது ஒழுக்கம், ஈடுபாடு போன்றவை ஒரு செயல் பிரச்சாரமாகி விடுகின்றது.
அல்குர்ஆன் இறங்கிய இந்த அருள் மாதத்தில் நாம் நம்முடைய மார்க்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்து, அதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் இந்தத் தூய மார்க்கத்தை எடுத்துச் செல்வதற்கு உறுதியேற்போம்.
நன்றி:
ஏகத்துவம், ஆகஸ்ட் -2011& TNTJCOVAI
ஏகத்துவம், ஆகஸ்ட் -2011& TNTJCOVAI