Wednesday, 8 April 2015

மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன? _காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 08.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   கிளைமர்கஸில் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "31. மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன?" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

31. மூஸாவிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள்

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று இவ்வசனத்தில் (2:108) கூறப்பட்டுள்ளது.
மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும்போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம்
கேட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
அந்த நான்கு விஷயங்களையுமே இது குறிக்கும் என்று புரிந்து கொள்வது தான் இதன் முழுமையான விளக்கமாக அமையும்.
1. மூஸா நபியவர்களையும், அவர்களது சமுதாயத்தையும் கடலில் மூழ்காமல் இறைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். இதன் பின்னர் சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத்தினரை மூஸா நபியின் சமுதாயத்தினர் கண்டார்கள். அப்போது "மூஸாவே! இவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக'' என்று கேட்டனர். (பார்க்க திருக்குர்ஆன் 7:138)
மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணைகற்பிக்கும் மக்களுக்கு உரியது. "தாத்து அன்வாத்'' என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணைகற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு "தாத்து அன்வாத்'' எனும் புனித மரம் இருப்பதுபோல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்'' என்று கேட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தூயவன். "அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக'' என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன்சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதீ 2106
இஸ்லாத்தில் நல்லவை அனைத்துமே இருக்கும் போது, இஸ்லாம் அல்லாத மதங்களின் சடங்குகள் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது என்ற கருத்தை இவ்வசனம் தாங்கி நிற்கின்றது. கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு, மீலாது விழா, புத்தாண்டு கொண்டாடுதல், தாலி, பால்கிதாபு, இறந்தோருக்கு 3, 7, 40ஆம் நாட்களில் சடங்குகள் செய்தல், மதகுருமார்களின் காலில் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள், மூஸா நபியிடம் பல கடவுள்களைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்தித்தால் விளங்கலாம்.
2. மூஸா நபியின் சமுதாயத்தினர் இறைவனின் ஆற்றலையும், வல்லமையையும் கண்கூடாகக் கண்ட பின்னர் "அல்லாஹ்வை எங்கள் கண்முன்னே காட்டுவீராக!'' என்று மூஸா நபியிடம் கேட்டார்கள். உடனே பெரும் சப்தம் ஏற்பட்டு மூர்ச்சையானார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 4:153)
மனிதர்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று இறைவன் அறிவித்திருக்கும் போது, அதை மாற்றியமைக்குமாறு இறைவனிடம் கேட்பது இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்துவதாகும்.
எதைத் தனது முடிவாக இறைவன் அறிவித்திருக்கிறானோ அதை மாற்றுமாறு கோரக் கூடாது என்பதையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.
3. இறைவன் எந்தச் சட்டத்தைப் போடுவதாக இருந்தாலும் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சட்டம் இயற்றுவான் என்று நம்ப வேண்டும். அதில் குடைந்து, குடைந்து கேள்வி கேட்டால் அது நமக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற கேள்விகளையும் மூஸா நபியின் சமுதாயத்தினர், மூஸா நபியிடம் கேட்டுள்ளனர்.
மூஸா நபியின் காலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியால் இறந்தவர் மீது அடியுங்கள்; இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை அடையாளம் காட்டுவார் என்று இறைவன் கட்டளையிட்டான்.
ஒரு மாட்டை அறுங்கள் என்று அல்லாஹ் கூறியவுடன் எதாவது ஒரு மாட்டை அவர்கள் அறுத்திருக்கலாம். எத்தகைய மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலும் இறைக் கட்டளையைச் செயல்படுத்தியவர்களாக ஆகியிருப்பார்கள். ஆனால், மாட்டின் வயது என்ன? நிறம் என்ன? தன்மை என்ன என்று தேவையற்ற பல கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
(பார்க்க: திருக்குர்ஆன் 2:67-71)
4. வஹீ அருளப்படும் காலகட்டத்தில் இறைத்தூதரிடம் கூடுதல் விளக்கம் கேட்கக் கூடாது என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கி நிற்கின்றது.
திருக்குர்ஆன் 5:101, 102 வசனங்களில் இது தெளிவாகவும் குறிப்பிடப்படுகின்றது.
"எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகம் கேள்வி கேட்டதாலும், நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலுமே அழிந்து போயினர்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 7288
"தடை செய்யப்படாத ஒன்றைப் பற்றி ஒருவன் கேள்வி கேட்டு அக்கேள்வியின் காரணமாக அது தடை செய்யப்பட்டது என்றால் அந்த மனிதன்தான் முஸ்லிம்களிலேயே மிகப் பெரிய குற்றவாளி'' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 7289
மூஸா நபியிடம் இஸ்ரவேலர்கள் கேட்டது போல் நபிகள் நாயகத்திடம் கேட்கக் கூடாது என்பது மேற்கண்ட நான்கு விஷயங்களையும் உள்ளடக்கும்.
நபிமார்களிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என்ற கருத்தைத்தான் இவ்வசனம் கூறுகின்றது.
ஆனால் தங்களிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது; தாங்கள் கூறுவதைக் கண்மூடி மக்கள் நம்ப வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தைப் போலி அறிஞர்கள் சான்றாக ஆக்க முயல்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸல்) காலத்திற்குப் பின் எந்த அறிஞரிடம் கேள்வி கேட்டாலும் அதன் காரணமாக ஹலாலான எதுவும் ஹராம் ஆகாது. ஹராமான எதுவும் ஹலால் ஆகி விடாது. எனவே மார்க்க அறிஞர்கள், தம்மிடம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கு இவ்வசனத்தைக் கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது.
அதிக விளக்கத்திற்கு இதே பகுதியில் 150வது குறிப்பைக் காண்க!