Tuesday, 11 September 2012

பட்டாசுக்களால் பலியாகும் உயிர்கள் : தடுக்க வழி என்ன?




சிவகாசி பட்டாசு வெடிவிபத்தில் ஏராளமானோர் பலியாகி பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்று எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முஹம்மது அப்துல்காதர்விருதுநகர்
அரசாங்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு கொஞ்சம் மூளை இருந்துஅந்த மூளையைப் பயன்படுத்தி சட்டங்களை இயற்றி இருந்தால்இதுபோன்ற பேரழிவுகளைத் தடுத்திருக்க முடியும்.

வெடி மருந்துகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். மிக அவசியமான தேவைகளுக்காகவே தவிரவேறு எதற்காகவும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்றுதான் அறிவுடைய மக்கள் முடிவுக்கு வருவார்கள்.
பாறைகளை உடைப்பதன் மூலம்தான் சாலை வசதிகளைப் பெற முடியும் என்பதால்இதற்காக வெடிமருந்துகளைப்  பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.
உணவைச் சமைத்துச் சாப்பிட நெருப்பு அவசியம். அதை உருவாக்கிட தீப்பெட்டி அவசியம் என்பதால் இதற்காக வெடிமருந்துகள் பயன்படுத்துவதை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்கிறது.

படிப்படியாகக் குறைந்து வரும் தீப்பெட்டிப் பயன்பாடு காலப்போக்கில் அறவே இல்லாமல் போய்விடும். அதுபோல் ஜல்லிகள் மூலம் சாலைகள் போடுவதற்குப் பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் தொழில் நுட்பம் அதிகரிக்கும்போது பாறைகளை உடைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். அப்போது மக்களுக்கு வெடி மருந்துகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்.
அதுவரை மேற்கண்ட இரண்டு காரியங்களுக்கு மட்டுமே வெடிமருந்துகள் குறைந்த அளவுக்கு தேவைப்படும். இவற்றைத் தவிர மற்ற அனைத்துப் பயன்பாடுகளில் இருந்தும் வெடி மருந்துகளைத் தள்ளிவைப்பதுதான் அறிவுப்பூர்வமானது.
ஆனால் மக்கள் சர்வசாதாரணமாக வெடி மருந்துகளுடன் விளையாடும் நிலைக்கு  பட்டாசு உபயோகமே காரணமாகும். தீபாவளி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தி இதற்கு பட்டாசு வியாபாரிகள் மதச் சாயம் பூசிவிட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.
உண்மையில் இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பட்டாசுகள் பிற்காலத்தில் வந்த கண்டுபிடிப்பாகும்.
முந்தைய காலத்தில் தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் பட்டாசுகளை அறிந்திருக்கவில்லை. எனவே மதத்துக்கு வெளியே நின்று சிந்திப்பதுதான் சரியானதாகும். இப்படி சிந்தித்தால் பட்டாசுகள் வெடிப்பதால் கீழ்க்கண்ட தீமைகள் ஏற்படுவதை உணரலாம்.
பொருளாதாரத்தைத் பயனற்ற வழியில் விரயமாக்குவது
பட்டாசு வெடித்து உயிர்கள் பலியாவது
பட்டாசுகள் மூலம் குடிசைகள் எரிந்து சாம்பலாவது
பட்டாசு வெடிப்பவர்களுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் படுகாயங்களை ஏற்படுத்துவது
மனிதனின் காதுகள் தாங்கிக் கொள்ள முடியாத அதிக சப்தம் காரணமாக கேட்கும் திறனில் ஏற்படும் பாதிப்புகள்
இதய நோயாளிகளும்பச்சிளம் குழந்தைகளும்சிந்திப்பவர்களும்படிப்பவர்களும் இந்த சப்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகுவது
பட்டாசுகள் மூலமாக வெளியேறும் நச்சுப்புகை மூலம் காற்று மாசு படுகிறது
அதை சுவாசிப்பதன் மூலம் மனிதர்களும்இன்னபிற உயிரினங்களும் கடும் பாதிப்புக்குகளைச் சந்திக்கின்றன.நோயாளிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பட்டாசு வெடிப்பதன் மூலம் குப்பைகளின் அளவும் அதிகரித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.
நச்சுப் பொருள் கலந்த குப்பைகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் இதனால் எந்த நன்மையாவது உள்ளதா என்றால் அதுவும் இல்லை.
நவீன சாதனங்கள் பயன்படுத்துவதன் காரணமாக காற்று மாசு படுவதாகவும்பூமி வெப்பமயமாகி வருவதாகவும்ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு வந்து மனிதர்களுக்கு கேடுகள் ஏற்படுத்துவதாகவும் கூறி அந்த நவீன சாதனங்களின் பயன்பாட்டைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேற்கண்ட சாதனங்களால் சில கேடுகள் ஏற்பட்டாலும் அது பட்டாசினால் ஏற்படும் கேடுகளை விட பலப்பல மடங்கு குறைவானதுதான். அத்துடன் இந்த சாதனங்கள் மூலம் விரைவாகவும் பணிகள் முடிகின்றன. சொகுசான இன்பங்களை அனுபவிக்கிறோம். இதற்காக மேற்கண்ட தீமைகளை நாம் சகித்துக் கொள்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் இதைவிட பெரும்கேடு ஏற்படுத்தும் பட்டாசுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
அறிவுள்ள மக்களுக்குத் தெரியும் இந்த விபரம் ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை.
அவசியமற்ற கேடுகள் விளைவிக்கின்ற பட்டாசுகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று முடிவு செய்தால்இதுபோன்ற அழிவுகளுக்கு இடமில்லை.
பட்டாசைக் காரணம்காட்டி வெடி மருந்துகள் பரவலாகக் கிடைப்பதால்தான்வெடிகுண்டு தயாரிக்கும் பயங்கரவாதிகளுக்கும் வசதியாகப் போய்விடுகிறது.
இதைப்பற்றி சிந்திக்காமல் நீதி விசாரணை நடத்துவதும் நஷ்ட ஈடு கொடுப்பதும்தான் அரசின் நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற பேரழிவுகள் தொடர்கதையாகிப் போய்விடும்.
நன்றி;-http://onlinepj.com/unarvuweekly/crackers-how-to-ban-17-03/

POSTED BY மாணவரணி SHAHID