திருப்பூர் மாவட்டம் சார்பாக 7.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் ஹாரூத் மாரூத் மனித ஷைத்தான்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
395. ஹாரூத், மாரூத் மலக்குகளா?
ஹாரூத்,
மாரூத் எனும் பெயர் கொண்ட இரண்டு மலக்குகள் மனிதர்களிடம் வந்து ஸிஹ்ர்
எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாக 2:102 வசனத்திற்குப் பலர் பொருள்
செய்துள்ளனர்.
அதாவது சூனியத்தை
இறைவன் புறத்திலிருந்து மலக்குகள் கற்றுக் கொண்டு அதை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்களாம்.
மலக்குகள்
எப்படி சூனியத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? என்ற நியாயமான கேள்விக்கு
விளக்கமளிப்பதற்காக ஒரு கதையையும் சில விரிவுரையாளர்கள் எழுதி
வைத்துள்ளனர்.
மனித
சமுதாயத்தை இறைவன் அடிக்கடி புகழ்ந்து பேசுவதைக் கேட்ட வானவர்கள்
பொறாமைப்பட்டு இறைவனிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்களாம். மனிதர்கள்
செய்யும் பாவங்களைப் பட்டியல் போட்டுக் காட்டினார்களாம். அதற்கு இறைவன்
"மனிதர்களுக்கு ஆசை என்ற உணர்வை நான் வழங்கியுள்ளேன். இதனால் அவர்கள் பல
சமயங்களில் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். உங்களில் இரண்டு பேரைத்
தேர்ந்தெடுங்கள். அவர்களுக்கும் நான் ஆசை எனும் உணர்வை வழங்குகிறேன்.
அவர்கள் மண்ணுலகம் செல்லட்டும்'' என்றானாம். மலக்குகளில் ஹாரூத், மாரூத்
என்ற இருவரைத் தேர்வு செய்தார்களாம். அவ்விருவரும் பூமிக்கு வந்து
மனிதர்களை விட அதிக அளவுக்குப் பாவங்கள் செய்தார்களாம். அவர்கள்தான்
சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்களாம். இப்படிப் போகிறது கதை!
இந்தக்
கதையும், இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட மேற்கண்ட
அர்த்தமும் சரியானது தானா? என்று நாம் ஆராயும் போது திருக்குர்ஆனின் பல
வசனங்களுடன் மேற்கண்ட அர்த்தம் மோதுவதைக் காணலாம்.
மனித
சமுதாயத்தை இறைவன் படைக்கவிருப்பதாக அறிவித்ததுமே "மனிதர்கள் குழப்பம்
ஏற்படுத்துவார்கள், இரத்தம் சிந்துவார்கள்'' என்று மலக்குகள் குற்றங்களை
அடுக்கினார்கள்.
(பார்க்க: திருக்குர்ஆன் 2:30)
ஆதம் (அலை)
அவர்களின் சிறப்பையும், தகுதியையும் இறைவன் நிரூபித்துக் காட்டிய பிறகு "நீ
தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு
இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று கூறி தங்கள் தவறுக்கு
மலக்குகள் வருந்தி விட்டனர். (பார்க்க: திருக்குர்ஆன் 2:32)
அது மட்டுமின்றி ஆதம் (அலை) அவர்களுக்குப் பணிந்து தங்கள் தவறுக்குப் பரிகாரம் தேடிக் கொண்டனர். (பார்க்க: திருக்குர்ஆன் 2:34)
மனிதனின்
தகுதியைப் பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன்
விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.
இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள், இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள்?
வானவர்கள் தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (திருக்குர்ஆன் 66:6)
அவர்கள்
(வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச
மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள். (திருக்குர்ஆன் 21:26,
27)
மேற்கண்ட
வசனங்களில் மலக்குகளின் பண்புகளும், இயல்புகளும் தெளிவாக
விளக்கப்படுகின்றன. இத்தகைய பண்புகளைக் கொண்ட வானவர்கள் இறைவன்
செயல்பாட்டில் குறை கண்டு எப்படி ஆட்சேபணை செய்திருப்பார்கள்?
மனிதனைப்
படைப்பதற்கு முன் இறைவன் மலக்குகளிடம் கருத்துக் கேட்டான். இறைவன்
அவர்களின் கருத்தைக் கேட்ட காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் கருத்தைக்
கூறினார்கள். இதை ஆட்சேபணை என்றோ, அதிகப் பிரசங்கித்தனம் என்றோ கூற
முடியாது.
இந்தக்
கதையில், மலக்குகளிடம் இறைவன் கருத்து எதுவும் கேட்காத நிலையில், மனிதனைப்
படைத்து முடித்து விட்ட நிலையில் மலக்குகள் எதிர்க் கருத்து தெரிவித்ததாகக்
கூறப்படுகின்றது.
இது போன்ற அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.
ஸிஹ்ர் எனும்
சூனியத்தைக் கற்பிப்பது, குப்ர் எனும் இறை மறுப்பாகும். இத்தகைய இறை
மறுப்பான காரியங்களை மலக்குகள் ஒரு போதும் செய்திருக்க முடியாது.
இந்த வசனம் சூனியம் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கிறது.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூத குருமார்கள் சூனியத்தின் மூலமும்,
பிற தவறான வழிகளிலும் பொருளீட்டிக் கொண்டிருந்தனர். மேலும், இதை
நியாயப்படுத்த பொய்யான வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.
"இந்தக் கலை
தங்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதன்று; மாறாக, ஸுலைமான் நபி அவர்கள்
வழியாகவே எங்களை வந்தடைந்துள்ளது. எனவே இந்தக் கலையில் ஈடுபடுவதும், இதன்
மூலம் பொருளீட்டுவதும் தவறானதல்ல'' என்பது அவர்களின் முதல் வாதம்.
"ஸுலைமான்
நிராகரிப்பவராக இருந்ததில்லை. சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்களே
நிராகரிப்பவர்களாக இருந்தனர்'' என்று அவர்களின் வாதம் இங்கே
மறுக்கப்படுகிறது.
சூனியம்
என்பது இறைமறுப்பாகும். இதற்கும் ஸுலைமான் நபிக்கும் சம்பந்தம் இல்லை.
ஸுலைமான் நபி காஃபிராக இருந்தால் தான் இதைக் கற்றுக் கொடுத்திருக்க
முடியும். அவர் காஃபிர் அல்ல. மாறாக ஷைத்தான்கள் தான் இதைக் கற்றுக்
கொடுத்தனர் என்பது இதன் கருத்து.
அடுத்து
இந்தக் கலையை ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்கள் வழியாகவே நாங்கள்
கற்றிருக்கிறோம் என்றும் கூறி அன்றைய யூதர்கள் மக்களை ஏமாற்றி வந்தனர்.
அதுவும் இவ்வசனத்தில் மறுக்கப்படுகிறது.
"அந்த இரு வானவர்கள் மீது சூனியம் அருளப்படவில்லை'' என்ற வாக்கியத்தின் மூலம் அவர்களின் இந்த வாதமும் மறுக்கப்படுகிறது.
அந்த இரண்டு
மலக்குகள் என்பது எப்படி ஜிப்ரீல், மீகாயீலைக் குறிக்கும்? இவ்வசனத்தில்
அந்தப் பெயர்களைக் காணவில்லையே? இதற்குப் பின் ஹாரூத், மாரூத் என்ற
பெயர்கள் தானே இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளன என்று பல கேள்விகள்
பிறக்கின்றன.
இவ்வசனத்தில்
மலகைனி எனக் கூறாமல் அல்மலகைனி என்று கூறப்படுகிறது. மலகைனி என்றால் இரு
வானவர்கள் என்பது பொருள். அல்மலகைனி என்றால் அந்த இரு வானவர்கள் என்பது
பொருள்.
"அந்த இரு
வானவர்கள்' என்று எப்போது கூற முடியும்? முன்னரே கூறப்பட்டிருந்தால் தான்
அவ்வாறு கூற முடியும். இது பின்னால் கூறப்படும் ஹாரூத், மாரூத்தைக்
குறிக்காது.
முன்னால் இரு
மலக்குகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதா என்றால் ஐந்து வசனங்களுக்கு முன்னால்
(2:98) ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
ஜிப்ரீல், மீகாயீல் என்ற வானவர்களுக்கும், சூனியக் கலைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று தெளிவுபடுத்தப்படுகின்றது.
அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.
ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.
ஷைத்தான்கள்
கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக்
கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று
குறிப்பிடப்படுகின்றதா?
இதை முதலில் நாம் விளங்க வேண்டும்.
"ஷைத்தான்'
என்ற சொல் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்தப்படுவது போலவே, மோசமான
மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. (பார்க்க: திருக்குர்ஆன் 2:14,
6:112, 114:5,6)
தனியாகப்
பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும் (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597)
கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 6032) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
நாம்
விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் கற்றுக்
கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான
ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை
அகற்றுவதற்கே இறைவன் "ஹாரூத், மாரூத்'' என்கிறான்.
அதாவது
இவர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் அவர்கள்
ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்களாவர் என்று அடையாளம்
காட்டுகிறான்.
அரபு மொழியில்
பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு
விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை "பத்ல்' என்று அரபு
இலக்கணம் கூறும். ஷைத்தான்கள் என்பதன் (பத்ல்) விளக்கமே ஹாரூத், மாரூத்
என்பது.
யூதர்களுக்கு
சூனியக் கலையைக் கற்றுத் தந்தது ஸுலைமான் நபியுமன்று. ஜிப்ரீல், மீகாயீல்
என்ற மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற (மனித) ஷைத்தான்களே
கற்றுத் தந்தனர் என்பது இது வரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.
தப்ஸீர்
கலையில் மேதையாகிய இமாம் குர்துபி அவர்கள் "இந்த வசனத்திற்குப் பல்வேறு
வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்''
என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
குர்துபி அவர்கள் குறிப்பிட்ட இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.
சூனியம் குறித்து முழுவிபரங்களை அறிய 28, 182, 285, 357 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்