Pages

Tuesday, 28 April 2015

மகான்களின் பரிந்துரை வேண்டல் - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி  அவர்கள் 213. மகான்களின் பரிந்துரை வேண்டல் எனும் தலைப்பில் விளக்கம்  வாசித்தார்.

மகான்களின் பரிந்துரை வேண்டல்

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து விட்டு அல்லாஹ்விடம் இவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதற்காகவே இவர்களை வணங்குகிறோம் எனக் கூறுவோருக்கு பதிலடியாக இவ்வசனங்கள் (10:18, 39:3) அமைந்துள்ளன.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை அறியாத முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை மரணித்தவர்களிடம் செய்து வருகின்றனர்
.
"பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்'' என்றே கூறுகிறோம். "ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்'' என்றே நாங்கள் நம்புகிறோம். "சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்?''
இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.
அது குற்றம் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் இதில் எந்த நியாயமும் இல்லை.
இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விஷயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.
முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவன் அல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர்.
மக்கத்துக் காஃபிர்கள் பெரியார்களைப் பற்றி, வைத்திருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.
அன்றைக்கு மக்காவில் இருந்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்றுக் கொண்டிருந்தனர். அந்த ஒரே இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்ற எண்ணத்தில் தான் சிறு தெய்வங்களை உருவாக்கி இருந்தனர். பின்வரும் வசனங்களில் இருந்து இதை அறியலாம்.
வானத்தைப் படைத்தவன் அல்லாஹ் தான். பூமியைப் படைத்தவன் அல்லாஹ் தான். உனவளிப்பவன் அல்லாஹ் தான். எங்களைப் படைத்தவன் அல்லாஹ் தான். அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதுதான் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்தது என்பதை 10:31, 23:84,85, 23:86,87, 23:88,89, 29:61, 29:63, 31:25, 39:38, 43:9, 43:87 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள், அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.
தர்கா வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கையும் மக்காவில் இருந்த இணைகற்பித்தவர்களின் நம்பிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்பதை இதிலிருந்து அறியலாம்.
இன்னும் சொல்வதாக இருந்தால் மக்காவில் இருந்த காஃபிர்களின் நம்பிக்கை தர்கா வழிபாடு செய்வோரின் நம்பிக்கையை விட மேலானதாக இருந்தது. அவர்கள் சாதாரண நிலையில்தான் குட்டி தெய்வங்களை வணங்குவார்கள். பெரிய பிரச்சனைகளின் போது அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள் என்று 6:63, 64, 6:40, 41, 10:22, 17:67, 29:65, 30:33, 34, 31:32, 39:8, 39:49, 41:51 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தான்; மகான்களை அல்ல என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம்.
இது அடிப்படையில்லாத சந்தேகமாகும்.
அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதில் சமாதியையும் சிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்க எந்தச் சான்றுமில்லை. முகாந்திரமும் இல்லை. சிலைகளும், சமாதிகளும் இதில் சமமானவை தான்.
மக்கத்துக் காபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிலைகளைத் தான். நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்றும் சிலர் கேட்கின்றனர்.
இந்த வாதமும் தவறானதாகும். ஏனெனில் மக்கா காபிர்கள் வணங்கியதும் பெரும்பாலும் நல்லடியார்களையும், நபிமார்களையும் தான். இதற்கு ஹதீஸ்களில் சான்று உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1601, 3352, 4289,
மற்றொரு அறிவிப்பில் இப்ராஹீம் நபி, மர்யம் (அலை) ஆகியோரின் சிலைகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 2351
நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்வதும், அவர்கள் இறைவனிடம் பரிந்து பேசிப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்களை வழிபடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிலைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க வேண்டியதில்லை.
"யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816,
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746,
அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873
சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
இஸ்லாத்தின் பார்வையில் சமாதிகளும், சிலைகளும் சமமானவை தான் என்பதற்கு இந்த நபிமொழிகள் சான்றுகளாக உள்ளன.
"சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியதே'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த பின் சமாதிகளை வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்லை என்பதை உணர வேண்டும்.
உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.
இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றும் தங்கள் செயலை நியாயப்படுத்துகின்றனர்.
இன்னும் சில உதாரணங்களைக் கூறி அதையே சான்றாகக் கொண்டு தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துகின்றனர்.
உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது; ஒரு இடைத்தரகர் மூலமே அணுக முடிகின்றது. அவ்வாறிருக்க அல்லாஹ்வை மட்டும் எப்படி நேரடியாக அணுக முடியும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.
உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது.
அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.
யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற அந்த வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?
நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாடும் வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.
நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். வக்கீல், தன் வாதத் திறமையால் குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார்; நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.
இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா?
யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?
இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?
அல்லாஹ்வைப் பற்றிக் கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்று உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(திருக்குர்ஆன் 16:74)
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்;488 பார்ப்பவன்488
(திருக்குர்ஆன் 42:11)
அவனுக்கு நிகராக யாருமில்லை.
(திருக்குர்ஆன் 112:4)
அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்.
(திருக்குர்ஆன் 36:78)
அல்லாஹ்வுக்கு எதையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுங்கள் என்று நாம் கூறும்போது மற்றொரு கேள்வியை எழுப்புகிறார்கள்
நமது வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை நம்மைப் போன்ற மனிதர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு கேட்காத மனிதன் எவனுமே இல்லை. மற்ற மனிதர்களின் உதவியின்றி மனிதனால் இந்த உலகில் வாழ்வது கூட சாத்தியமாகாது. நபிகள் நாயகம் (ஸல்) உட்பட மாந்தர் அனைவருமே, பிற மனிதர்களிடம் உதவி தேடியே இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் பிறரது உதவியின்றி வாழ முடியாது எனும் போது, இறந்து விட்ட நல்லடியார்களிடம் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? என்பதே அந்தக் கேள்வி.
இது பற்றி விவாகவும், விளக்கமாகவும் அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
(திருக்குர்ஆன் 5:2)
இந்த வசனத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கின்றான். வலியுறுத்தவும் செய்கிறான்.
மனிதனை இறைவனது அம்சம் பொருந்தியவனாகக் கருதி உதவி தேடுவதை மட்டுமே இஸ்லாம் மறுக்கிறது.
இறந்தவரை ஒருவன் அழைத்து உதவி தேடும் போது அவர் இறைவனது அம்சம் கொண்டவராக நம்பப்படுகிறார். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் கேட்கப்படும் சாதாரண உதவிகள் இத்தகைய நிலையில் இல்லை.
ஒருவன் இறந்தவரிடம் தமது நோயைக் குணப்படுத்துமாறு வேண்டுகிறான். மற்றொருவன் ஒரு மருத்துவரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு கேட்கிறான். இரண்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தென்பட்டாலும், இரண்டுக்குமிடையே அநேக வித்தியாசங்கள் உள்ளன.
மருத்துவரை அணுகுபவன் மருத்துவரைத் தனது கண்களால் நேரடியாகப் பார்க்கிறான். மருத்துவரும் இவனை நேரடியாகப் பார்க்கிறார்.
இறந்தவரை அணுகுபவன், அவரைத் தன் கண்களால் காண்பதில்லை. அல்லாஹ் எப்படி மறைவாக இருந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ அது போல் இந்தப் பெரியாரும் தன்னைக் கண்காணிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவரை அழைக்கிறான்.
மறைவாக இருந்து கொண்டு அனைத்தையும் கண்காணிக்கும் இறைவனது தன்மையை இறந்தவருக்கும் அவன் அளித்து விடுகிறான். மருத்துவரிடம் தேடும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை.
மருத்துவரை அணுகும் போது, இந்த மருத்துவர் தன்னால் இயன்ற அளவு நோய் தீர்க்க முயற்சிக்கிறார். அவர் எவ்வளவு தான் சிறப்பாக மருத்துவம் செய்தாலும் அந்த மருத்துவம் பயனளிக்காமலும் போகலாம். இந்த மருத்துவர் குணமளிக்க வேண்டும் என்று நாடிவிட்டால் அது நடந்து தான் ஆகும் என்பது கிடையாது என்ற நம்பிக்கையிலேயே மருத்துவரை அணுகுகின்றான்.
இறந்தவரை அணுகுபவனின் நம்பிக்கை இப்படி இல்லை. "இந்தப் பெரியார் மாத்திரம் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் நிச்சயமாக நமது நோய் நீங்கிவிடும். இவர் நினைத்தால் அது நடக்காமல் போகாது'' என்ற நம்பிக்கை தான் இவனிடம் உள்ளது. அதாவது பலவீனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்துக் காரியங்களின் மீதும் ஆற்றல் பெற்றவராகவும் இவர் கருதப்படுகிறார்.
ஒரு மருத்துவரை அணுகும் போது "இந்த மருத்துவர் ஒரு சமயத்தில் ஒருவரது பேச்சையே கேட்க முடியும். ஒரு சமயத்தில் பலபேர் தங்கள் நோய்கள் பற்றி முறையிட்டால் இவரால் எதையுமே கேட்க முடியாது'' என்ற நம்பிக்கையில் தான் அணுகுகிறோம்.
இறந்தவரை அணுகும் போது, இவன் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலரும் அவரிடம் உதவி தேடுவார்கள். உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலரும் இவரை அழைப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே அவரை அணுகுகின்றான். அதாவது எங்கிருந்து அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இந்தப் பெரியார் கேட்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அழைக்கிறான். இந்தத் தன்மை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமான தனித்தன்மையாகும்.
மருத்துவரின் கேட்கும் ஆற்றல் தன்னுடைய ஆற்றல் போன்றது தான் என்று ஒருவன் நம்புகிறான்.
இறந்து போனவரின் கேட்கும் திறனோ, இறைவனது கேட்கும் திறனுக்கு நிகரானது என்று நம்புகிறான்.
மருத்துவருக்கு மருத்துவ ஆற்றல் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல்களை வழங்கியுள்ளான் என்பதற்குச் சான்றும் உள்ளது.
இறந்தவரிடம் இத்தகைய ஆற்றல் இருப்பதை நாம் காண்பதில்லை. இறந்த பின் அவரிடம் இத்தகைய ஆற்றல் இருக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால், உயிரோடு இருந்த போது அவரிடம் இருந்த ஆற்றல்களும் கூட இறந்த பின் இல்லாது போய் விடுகின்றது. அதற்குத் தான் சான்றுகள் உள்ளன.
மருத்துவர், மருத்துவம் செய்யும் போது அதற்குரிய மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், ஆயுதங்கள் போன்ற சாதனங்களின் துணையுடன் செய்கிறார். அதை நாம் காணவும் செய்கிறோம்.
ஆனால் இறந்தவரோ இப்படி சாதனங்கள் எதனையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியால் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதாவது அல்லாஹ் உதவி செய்வது போலவே, இறந்தவரும் உதவி செய்வதாக இவன் நம்புகிறான்.
உதாரணத்துக்காகத் தான் மருத்துவரிடம் உதவி தேடுவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். ஒரு அமைச்சரிடமோ, அதிகாரியிடமோ, தொழிலதிபரிடமோ, தொழிலாளியிடமோ, வியாபாரியிடமோ, வேறு எவரிடமோ கேட்கும் உதவிகள் அனைத்தும் மருத்துவரிடம் தேடப்படும் உதவி போல் அமைந்துள்ளன.
ஆனால் மகான்கள், பெரியார்கள், மெஞ்ஞான குருநாதர்கள், என நம்பப்படுவோரிடம் தேடப்படும் உதவிகள் இறைவன் நிலையில் அவர்களை வைத்து உதவி தேடுவது போல் அமைந்துள்ளன. இந்த வேறுபாட்டை விளங்காததன் காரணமாகவே இக்கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி தேடும் போதும், உதவி செய்யும் போதும் எவருமே இறைத்தன்மை பெற்றவராக எண்ணப்படுவதில்லை. சமாதிகளில் போய்க் கேட்கும் உதவிகளில் சமாதிகளில் அடங்கப்பட்டவருக்கு இறைத் தன்மை அளிக்கப்படுகிறது.
தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளைக் காண்க!