Pages

Sunday, 15 June 2014

"அனாதையை அரவணைப்பவரும், அண்ணல் நபியும் " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆண்டியகவுண்டனூர் கிளை  சார்பாக 15.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "அனாதையை அரவணைப்பவரும், அண்ணல் நபியும் " எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
5304. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.
2699. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், 'மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாள்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள்" என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்" என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்பதை அழித்து விடுங்கள்" என்று கூறினார்கள். அலீ(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்து(கள் கொண்ட பத்திரம்) ஆகும். (அந்த ஷரத்துகளாவன:) (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையக்கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது" என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது" என்றார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்" என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்" என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)" என்று கூறினார்கள்.