உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781)
இந்த நபிமொழியையும் இந்தக் கருத்தில் அமைந்த பல நபி மொழிகளையும் அடிப்படையாகக் கொண்டு தாயத்தை யாரும் அணியக் கூடாது. அது இணை வைப்பாகும் என்று நாம் கூறுகிறோம்.
மேலும் நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்ய நபிகளார் கட்டளையிட்டார்கள். இறைவனிடம் பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். ஆனால் தாயத்தை அணியச் சொல்லவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் :புகாரி (5678)
அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரலி),
நூல் :திர்மிதீ (1961),அபூதாவூத் (3357)
நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் "அபூ ஹம்ஸாவே! நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன்'' என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப் பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), "சரி (அவ்வாறே ஓதிப் பாருங்கள்)'' என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள்.
(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)
அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ்,
நூல் :புகாரி (5742)
நபிகளாரின் இந்தக் கட்டளையை மதிக்காமல் தாயத்து, தட்டு, தகடு என்று மூடநம்பிக்கையில் சில முஸ்லிம்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மூடநம்பிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில ஆலிம்கள் நம்முடைய ஆதாரங்களுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளனர். அந்த மறுப்பு சரியானதா? இல்லையா? என்பதைக் காண்போம்.
தமீமா என்றால் என்ன?
தாயத்து அணிவதைத் தடுத்தார்கள் என்ற செய்தியில் தாயத்து என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் தமீமா என்ற அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது.
இந்த தமீமா என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு வார்த்தை விளையாட்டுக்களை ஆலிம்கள் என்று சொல்பவர்கள் விளையாடி தாயத்து அணியலாம் என்று கூறி வருகிறார்கள்.
القاموس المحيط - (1 / 1400)
والتَّميمُ : التامُّ الخَلْقِ والشديدُ وجَمْعُ تَميمَةٍ كالتَّمائمِ لخَرَزَةٍ رَقْطاءَ تُنْظَمُ في السَّيْرِ ثم يُعْقَدُ في العُنُقِ .
தமீமா என்பது கருப்பும் வெள்ளையும் சேர்ந்த மணியாகும். வாரில் இது கோர்க்கப்பட்டு பின்னர் கழுத்தில் போடப்படும். (அல்காமூஸுல் முஹீத், பாகம் :1, பக்கம் :1400)
لسان العرب - (12 / 67)
والتَّمِيمُ العُوَذ واحدتها تَمِيمةٌ قال أَبو منصور أَراد الخَرز الذي يُتَّخَذ عُوَذاً والتَّمِيمةُ خَرزة رَقْطاء تُنْظَم في السَّير ثم يُعقد في العُنق وهي التَّمائم والتَّمِيمُ عن ابن جني وقيل هي قِلادة يجعل فيها سُيُورٌ وعُوَذ وحكي عن ثعلب تَمَّمْت المَوْلود علَّقْت عليه التَّمائم والتَّمِيمةُ عُوذةٌ تعلق على الإِنسان قال ابن بري ومنه قول سلَمة بن الخُرْشُب تُعَوَّذُ بالرُّقى من غير خَبْلٍ وتُعْقَد في قَلائدها التَّمِيمُ قال والتَّمِيمُ جمع تمِيمةٍ وقال رفاع
தமீமா என்பது கறுப்பும் வெள்ளையும் கலந்த மணியாகும். அதை வாரில் கோர்க்கப்பட்டு பின்னர் கழுத்தில் போடப்படும் என்று அபூ மன்ஸூர் கூறுகிறார். தமீமா என்பது ஒரு மாலையாகும் அதில் வாரும் பாதுகாப்பு பொருளும் இருக்கும் ஒன்றாகும் என்று இப்னு ஜின்னீ கூறுகிறார். (லிஸானுல் அரப், பாகம் : 12, பக்கம் : 67)
தற்போது போடப்படும் தாயத்து என்பது தகடால் செய்யப்பட்டுள்ளது. நபிகளார் தடுத்தது இந்தத் தாயத்தை இல்லை. எனவே அஹ்மதில் இடம் பெறும் ஹதீஸை வைத்து தற்போது போடப்படும் தாயத்தைத் தடை செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.
இது விநோதமான விளக்கமாகும். எந்த அறிவாளியும் இது போன்ற விளக்கத்தைக் கூறத் துணிய மாட்டான். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தாயத்து என்பது அவர்களுக்குக் கிடைத்த மூலப்பொருள் மூலம் செய்திருப்பார்கள். அதனால் அந்த மூலப்பொருளில் இருந்தால் தான் தடை செய்ய முடியும் என்று சொன்னால் இதை விட அசட்டுத் தனமான வாதம் வேரு எதுவும் இருக்க முடியாது. நபிகளார் காலத்தில் இருந்த சிலைகள் எதனால் செய்யப்பட்டிருக்கும்? அவர்கள் காலத்தில் இருந்த கல் ,மண். மரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டிருக்கும். நபிகளார் காலத்திற்குப் பிறகு கண்டு பிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருளால் ஒருவர் சிலையை செய்து வைத்துக் கொண்டு இந்தச் சிலையை வணங்கலாம். ஏனெனில் நபிகளார் காலத்தில் இருந்த சிலைகள் கல்லால் மண்ணால் செய்யப்பட்டது; அதைத் தான் தடுத்தார்கள் என்று கூறினால் அறிவுள்ள யாராவது ஏற்றுக் கொள்வார்களா?
கல்லாலோ மண்ணாலோ செய்ததற்காக தடுத்தார்களா அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் தன்மை இருந்ததற்காக தடுத்தார்களா என்று சிந்திக்க வேண்டாமா?
நபிகளார் காலத்தில் கல், மண்ணால் செய்திருந்தால் அன்றைய கால மக்களின் நம்பிக்கை என்ன? அந்தச் சிலைக்கு கடவுளின் ஆற்றல் உள்ளது என்பது தான். இந்த நம்பிக்கை பிளாஸ்டிக் சிலைகளுக்கு உள்ளது என்று நம்புவதால் இதுவும் கூடாது என்று கூறுவோம்.
இதைப் போன்று தான் தாயத்து என்பது எந்த மூலப் பொருளில் இடம் பெற்றிருந்தாலும் அன்றைய கால மக்களின் நம்பிக்கையைப் போன்றிருந்தால் எந்தப் பொருளில் தாயத்து செய்திருந்தாலும் அதையும் கூடாது என்று தான் நாம் கூறுவோம்.
والتمائم جمع تميمة وهي خرز أو قلادة تعلق في الرأس كانوا في الجاهلية يعتقدون أن ذلك يدفع الآفات (فتح الباري - ابن حجر - (10 / 196)
தாயத்து என்பது மணியாகும். அல்லது தலையில் மாட்டப்படும் மாலையாகும். அறியாமைக் காலத்தில் ஆபத்துகளிலிருந்து இது காப்பாற்றும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள். (பத்ஹுல் பாரி, பாகம் : 10, பக்கம் : 196)
தாயத்து என்பது ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும் சாதனம் என்று நம்பிக்கை அன்றைய அறியாமைக் கால மக்களிடம் இருந்துள்ளது. எனவே இந்த நம்பிக்கை எந்தப் பொருளில் இருந்தாலும் அது கூடாது என்றே கூற வேண்டும்.
நபிமொழியில் கூறப்படும் தாயத்து என்பது தற்காலத்தில் பயன்படுத்தப்படும் தாயத்தைக் குறிக்காது; திருக்குர்ஆன் வசனங்கள் அதில் இருந்தால் அது தமீமாவில் அடங்காது என்ற இவர்களின் கூற்றை மறுக்கும் விதமாக தற்போது பயன்படுத்தும் தாயத்தையும் தமீமா என்று கூறுவார்கள் என்று ஷாஃபீ மத்ஹப் நூலிலும் கூறப்பட்டுள்ளது.
حاشية الجمل - (1 / 252) - مذهب الشافعي
( قَوْلُهُ : كَالتَّمَائِمِ ) جَمْعُ تَمِيمَةٍ وَهِيَ وَرَقَةٌ يُكْتَبُ عَلَيْهَا شَيْءٌ مِنْ الْقُرْآنِ وَتُعَلَّقُ عَلَى الرَّأْسِ مَثَلًا لِلتَّبَرُّكِ وَيُكْرَهُ كِتَابَتُهَا وَتَعْلِيقُهَا إلَّا إذَا جُعِلَ عَلَيْهَا شَمْعٌ ، أَوْ نَحْوُهُ فَلَا يَحْرُمُ مَسُّهَا وَلَا حَمْلُهَا مَا لَمْ يُطْلَقْ عَلَيْهَا مُصْحَفٌ
தமீமா என்பது இலைகளில் திருக்குர்ஆனில் உள்ள ஏதாவது ஒன்றை அதில் எழுதியிருப்பதாகும். (ஹாஸியத்துல் ஜமல். பாகம் : 1, பக்கம் : 252)
நபி (ஸல்) அவர்கள் தடை செய்தது ஷிர்க்கான வாசகம் உள்ள தாயத்தைத் தான். திருக்குர்ஆன் வசனங்கள் உள்ள தாயத்தை அணிந்தால் அது இணை வைத்ததில் சேராது என்று தாயத்தை அணிவது கூடும் என்று கூறுபவர்கள் சொல்கிறார்கள்.
தாயத்தைப் பொதுவாக தடை செய்த நபிகளார். அதில் திருக்குர்ஆன் வசனங்கள் இருந்தால் தடையில்லை என்று எங்கும் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிக்காதது ஒன்றில் நாம் விதிவிலக்கு அளிப்பது மார்க்கத்தில் கை வைப்பதாகும்.
ஓதிப் பார்த்ததைத் தடை செய்த நபிகளார் அவர்கள் ஓதிப் பார்க்கும் வாசகங்களில் இணை வைப்பு வாசகங்கள் இல்லையானால் கூடும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்லிக் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப் பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி),
நூல் :முஸ்லிம் (4427)
இதைப் போன்று நீங்கள் தாயத்தில் எழுதி வைக்கும் வாசகங்களைக் காட்டுங்கள் என்று கேட்டு அதில் இணை வைப்பு வாசகங்கள் இல்லையானால் தாயத்தை அணிந்து கொள்ளலாம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு எந்தத் தகவலும் இல்லாத போது எந்த வாசகம் இருந்தாலும் அது கூடாது என்று கூறுவதே சரியான கருத்தாகும்.
இஸ்லாத்தில் ஒரு விஷயத்தைக் கூடும் என்று சொல்வதற்கும் கூடாது என்று சொல்வதற்கும் தகுதியானவர்கள் அல்லாஹ்வும் அவன் தூதருமாவார்கள். மற்ற எவரும் ஒன்றைக் கூடும் என்று கூற அல்லது கூடாது என்று கூற அனுமதியில்லை இது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
தாயத்து இவ்வாறு இருந்தால் அணியலாம், இவ்வாறு இருந்தால் அணியக் கூடாது என்று கூறும் நபர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்களின் கூற்று மார்க்கமாக ஆகாது. எனவே திருக்குர்ஆனோ நபிமொழியோ அல்லாத இந்த கூற்றுகள் ஆதாரமாக ஆகாது.
ஆக்கம்:சகோ.அப்துந் நாஸிர் M.I.Sc.,