Pages

Wednesday, 26 December 2012

29.12.2012 _கண்டனப் பொதுக்கூட்டம் ஏன் ?

இந்த உலகம் டிசம்பர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அழியப்போகின்றது என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக 

21 ஆம் தேதி உலகம் அழியும் என்ற மூட நம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ”21 ஆம் தேதி அன்று உலகம் அழியாது” என்ற விழிப்புணர்வு நோட்டிசை வெளியிட்டது. இதை தமிழகம் முழுவதும் உள்ள TNTJ கிளைகள் விநியோகம் செய்தது.
சென்னையில் இந்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னனியினர், ”முஸ்லிம்கள் மத கலவரத்தை தூண்டுகின்றனர்” TNTJ நிர்வாகிகளை கைது செய்! என நோட்டிஸ் வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து, நள்ளிரவில் வீடு புகுந்து, பெண்களை கேவலமாக பேசி, அராஜகம் செய்து,நோட்டிஸ் விநியோகம் செய்த TNTJ நிர்வாகிகளை D1 காவல் நிலைய AC செந்தில் குமரன் கைது செய்துள்ளார்.
இதை கண்டித்து AC செந்தில் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி D1 காவல் நிலையம் முற்றுகை ஆர்பாட்டம் கடந்த 22-12-12 அன்று நடைபெற்றது.

 

முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு:
உடனடியாக தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். முஸ்லிம்கள் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து அராஜகம் செய்த காவல்துறையின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், இதற்கு சூத்திரதாரியாக செயல்பட்ட திருவல்லிக்கேணி ஏ.சி.செந்தில் குமரன் என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டி-1 காவல்நிலையத்தை சம்பவம் நடந்த அதே தினமான சனிக்கிழமை மாலை 4மணிக்கு முற்றுகையிடுவதாக காலை 11மணிக்கு, டிஎன்டிஜே தென்சென்னை மாவட்டம் சார்பாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
குறித்த நேரத்திற்கு முன்னரே மக்கள் காவல்நிலையத்திற்கு அருகில் குவியத் தொடங்கினர்.
மிகப்பெரிய மக்கள் திரள் திரள உள்ளதாக உளவுத்துறை மூலம் அறிந்த காவல்துறை, போராட்டக் களத்தில் போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே வலுக்கட்டாயமாக கைதுப் படலத்தைத் துவக்கினர்.
நீங்கள் கைது செய்வதற்கு நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். எங்களது உணர்வுகளை மக்கள் மத்தியில் வெளிக்காட்ட விடுங்கள். பிறகு நாங்களே கைதாகின்றோம் என்று நமது மாநில நிர்வாகிகள் கூற அதையும் கேட்காத காவல்துறை நமது சகோதரர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனங்களில் ஏற்ற முயற்சிக்க அங்கு நடந்த தள்ளுமுள்ளின் காரணமாக தடியடி நடத்தி நமது சகோதரர்களுக்கு இரத்தக்களறியை ஏற்படுத்தினர்.
மற்ற கூட்டங்களிலெல்லாம் யார் மீதும் தடியடி நடத்தப்பட்டால் அவர்கள் அனைவரும் ஓடிவிடுவார்கள். ஓட்டமெடுத்ததன் விளைவாக அந்த இடத்தில் போராட்டம் நடந்ததற்குண்டான எந்த அறிகுறிகளும் தெரியாத வண்ணம் அந்த இடம் மாறிவிடும்.
ஆனால் நமது சகோதரர்களோ எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு நின்றதைக் காணும்போது நமது சகோதரர்கள் எப்படி வார்த்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்தது. தடியடி நடத்துவதே கூட்டம் கூடவிடாமல் கலைப்பதற்குத்தான். ஆனால் தடியடி நடத்தப்பட்ட பிறகுதான் மக்கள் சாரை சாரையாக அணிவகுத்து அதே இடத்தில் குழுமத் தொடங்கினர்.
சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்ரோஷத்துடன் காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் அராஜகம் ஒழிக என்ற கோசங்கள் விண்ணைப் பிளந்தன.
பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் முற்றுகையிட்டனர். ஆயிரத்திற்கும் நெருக்கமான சகோதர, சகோதரிகள் கைது செய்யப்பட்டு பல மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆக்ரோசத்துடன் கோசமிட்டுக் கொண்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.
இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கொந்தளித்த கொதிப்பின் வெளிப்பாடு மக்களது முகங்களில் தெரிந்தது. உணர்ச்சிப் பிளம்பில் வெகுண்டெழுந்த மக்கள் அனைவரும் கைது செய்து வாகனங்களில் ஏற்றும் வரை அவர்களை ஆசுவாசப்படுத்தி போராட்டக்களத்தில் நிற்க வைப்பது கடினமான காரியமாக தென்பட்டது.
அனைவரையும் கைது செய்து ஏற்றிச் செல்லும் அளவிற்கு காவல்துறையில் வாகன வசதியும் இல்லை. அவர்கள் கொண்டு வந்த வாகனங்களும் போதவில்லை. எனவே உடனடியாக மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் ஒரு அறிவிப்பைச் செய்தார்.
கட்டுப்பட்டு நடந்த கட்டுப்பாடு மிக்க கூட்டம்:
மக்கள் குறைவாக இருந்தபோது, சொற்பமான மக்களை போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே கைது செய்ய நிர்பந்தப்படுத்தி தடியடி நடத்தினீர்கள். ஆனால் இப்போது எங்களைக் கைது செய்ய உங்களுக்கு வாகனங்கள் போதவில்லை.
நீங்கள் எங்களைக் கைது செய்ய பலவந்தப்படுத்தி தடியடி நடத்தியுள்ளீர்கள். இந்த தடியடிகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம். அப்படிப்பட்ட கொள்கை உறுதி மிக்க கூட்டம்தான் இந்தக்கூட்டம்.
இதுபோன்ற பல தடியடிகளையும், இன்னல்களையும் சந்தித்துத்தான் நாங்கள் இங்கு நின்று கொண்டிருக்கின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, அனைவரும் எந்தவிதமான சப்தமுமில்லாமல் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் எனவும் மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் கட்டளையிட்டதும் அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்த காவல்துறை:
அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றதும் காவல்துறையினர் நமது மாநில நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஜாயிண்ட் கமிஷனர் ரவிக்குமார் மற்றும் டி.சி.கிரி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இரவு 7மணிக்கு ஆரம்பமான பேச்சுவார்த்தை 1மணி நேரம் நீடித்தது. அதில் நள்ளிரவுக் கைதுக்கு வருத்தம் தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரிகள், தடியடி நடத்தியதற்கும் வருத்தம் தெரிவித்தனர்.
ஏற்கனவே 23 முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து போராட்டம் நடத்துவதாகச் சொல்லி அதில் பலவிதமான அசம்பாவிதங்களை அரங்கேற்றி, முஸ்லிம் அமைப்புகள் என்றாலே அவர்கள் இப்படித்தான் என்ற அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர். அதுதான் இந்த தடியடியை கீழ்மட்ட போலீசார் நிகழ்த்துவதற்குக் காரணம் என்றும், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதாகவும், இனியொருகாலம் இதுபோல நடக்காது என்றும் கூறி, மண்டபத்தில் கைது செய்து வைத்துள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுவதாகவும் அவர்கள் கூறினர். ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது குறித்தும் பேசப்பட்டது.
கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நமது சகோதர, சகோதரிகள் இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் மீது போடப்பட்ட வழக்கை திங்கட் கிழமை நீதிமன்றத்தில் திரும்பப்பெறுவதாகவும் உறுதியளித்தனர்.
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் தி.மு.க.வின் வாக்கு வங்கிகளாக இருந்தனர். கருணாநிதி ஆட்சியில் டிசம்பர் ஆறு வரும்போதெல்லாம் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து காவல் துறையினர் நடத்திய வெறியாட்டம் காரணமாக தி.மு.க.வை முஸ்லிம்கள் நஞ்சென வெறுத்தனர். முஸ்லிம்கள் தக்க பாடம் கற்பித்தவுடன் இந்த அராஜகம் முடிவுக்கு வந்தது.
அதே அராஜகத்தைத்தான் செந்தில் குமரன் என்ற காவி அதிகாரி மூலம் அ.தி.மு.க. அரசு ஆரம்பித்து வைத்துள்ளது.
வினியோகிக்கப்பட்ட பிரசுரம் வழக்குப் பதிவு செய்யத் தக்கதல்ல என்றாலும் ஒரு வேளை வழக்குப் போடுவதாக இருந்தால் தவ்ஹீத் ஜமாத்துக்கு தெரிவித்தால் வழக்கு போடப்பட்டவர்களை போலீஸில் அல்லது நீதி மன்றத்தில் ஒப்படைக்க தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்காகவே காவிச் சிந்தனையுடன் இந்த அராஜகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொலை கொள்ளை போன்ற பாதகச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதைக் தடுக்க வக்கில்லாத காவல் துறையினர் நோட்டீஸ் கொடுத்ததற்காக இப்படி நடந்து கொண்டது முஸ்லிம்களை அச்சுறுத்தவும் அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட்டால் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்ற போதும் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்க
செந்தில் குமரன் உள்ளிட்ட காவி அதிகாரிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தவும் அதை வென்றெடுக்கவும் எத்தகைய வழிமுறையைக் கையாள்வது என்பது குறித்தும் நிர்வாகக் குழு கூடி தக்க முடிவை அறிவிக்கும். இன்ஷா அல்லாஹ்
அதிமுக அரசு இனிமேல் காவிச் சிந்தனையுடன் தான் நடக்கும் என்ற அறிகுறிகள் அதிகமாகி வருகின்றன. முஸ்லிம்களின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதற்கு ஏற்ற நடவடிக்கையை தவ்ஹீத் ஜமாஅத் செய்யும். எந்த அடக்குமுறைக்கும் இந்த ஜமாஅத் அடங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
துண்டுபிரசுரத்தில் இருந்தது என்ன? :
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விநியோகம் செய்யப்பட்ட துண்டுபிரசுரத்தில் “உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதிக்குள்ளான மக்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலும், எப்போது உலகம் அழியும் என்பது குறித்த செய்திகளை அல்லாஹ்வும், அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எப்படி தெளிவுபடுத்தியுள்ளார்கள் என்ற செய்திகளையும் கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.
அதில் கடலூரில் உள்ள வடலூரில் வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்துவிட்டதாகவும், வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால்தான் உலகம் அழியப்போகின்றது என்று பரப்பப்படும் பீதியை போக்கும் வகையிலும் விழிப்புணர்வு வரிகள் இடம்பெற்றிருந்தன.
வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் அணைந்த காரணத்தால் உலகம் அழியப்போகின்றது என்று சிலர் வந்தந்தி பரப்பி வருகின்றனர். அவர் ஏற்றி வைத்த தீபம் அணைவது இருக்கட்டும், அதை ஏற்றிவைத்த வள்ளலாரே இறந்துவிட்டாரே! இந்த செய்தியை மக்கள் சிந்திக்கமாட்டார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விதான் இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இன்னபிற சங்பரிவார கும்பல்களின் மனதை புண்படுத்திவிட்டதாம்.
காரணம் நம்முடைய துண்டு பிரசுரத்தில் வள்ளலார் இறந்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கின்றோம். ஆனால் வள்ளலார் இறக்கவில்லை. இன்றுவரை அவர் உயிரோடு இருக்கின்றார். உயிரோடு உள்ளவரை இறந்துவிட்டார் என்று சொல்லி எங்களது மனதை புண்படுத்திவிட்டார்கள் முஸ்லிம்கள். எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதுதான் சங்பரிவாரக் கும்பலின் குற்றச்சாட்டு.
இந்த துண்டுபிரசுர விநியோகத்தைக் கண்டித்து அனைத்து சங்பரிவார அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கடந்த 20.12.12 வியாழக்கிழமை அன்று சாலை மறியல் செய்தனர். அதில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது தூண்டுதலின் பேரில் காவி கயவர்களுக்கு ஆதாரவாகத்தான் இந்த நள்ளிரவு கைது படலத்தை காவல்துறை அரங்கேற்றியுள்ளது.
தீபம் அணைந்து விட்டதால் உலகம் அழியும் என்று சொன்னால் அழியப் போகும் உலகத்தில் இந்து அல்லாத மக்களும் உள்ளனர். அவர்கள் அழியப்போகிறார்கள் என்று சொல்வது எங்களை பாதிக்கிறது என்று நாம் புகார் கொடுத்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட பிரசுரத்திற்காக எந்த வழக்கும் போட சட்டத்தில் இடம் இல்லை.
வள்ளலார் ஏற்றிய தீபம் அணைந்ததால், உலகம் அழியப்போகிறது என்றால் அந்த தீபத்துக்கு முன்னரே வள்ளலார் மரணித்துவிட்டாரே என்ற கருத்து மத நம்பிக்கையைப் புண் படுத்துவது கிடையாது. முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று யாராவது கூறினால் அவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.
அதுபோன்ற ஒரு கருத்தை வெளியிட்டது எந்தவிதமான குற்றச் செயலிலும் சேராது என்பதுதான் உண்மை.
இந்தப் பிரசுரத்திற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து முன்னணியினர் புகார் கொடுத்தார்கள் என்பதற்காக சட்டம் தெரிந்த எந்த அதிகாரியும் வழக்குப் போடமாட்டார்.
மேலும் வள்ளலார் உருவ வழிபாட்டை எதிர்த்தவர். இறைவனை ஒளி வடிவமாகவே வழிபடவேண்டும் என்று பிரச்சாரம் செய்து இந்து மதத்தை எதிர்த்தவர். சிலை வழிபாடு நடத்தும் இந்துமுன்னணியினர் வள்ளலாருக்காக வக்காலத்து வாங்குவதற்கு கலவரம் ஏற்படுத்துவதே காரணம் என்பதை அறிவுள்ள அதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள்.
ஆனால் இந்து முன்னணி கொடுத்த புகாரின் பேரில் டிஎன்டிஜே மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மீது உயர் அதிகாரிகள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தத்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வழக்குப் போட்டதுடன் நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டு போய் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, ஆண்களைத் தரதரவென அடித்து இழுத்து வந்ததும் முஸ்லிம்களை அடக்கி வைக்க வேண்டும் என்று அதிகார வர்க்கம் திட்டமிட்டு நடத்திய சதியாகும்.
இப்படி நள்ளிரவு அராஜகம் நடத்தினால் டிஎன்டிஜேயினர் போராட்டம் நடத்தலாம். அதில் தக்க பாடம் கற்பித்தால் இனிமேல் எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் போராடத் துணிவு இருக்காது என்று அதிகார மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முற்றுகைப் போராட்டம் என்பது அனுமதியின்றி கைதாவதுதான் என்றாலும் முற்றுகைப் போராட்டம் நடத்தவருவோர் தங்கள் உணர்வுகளைக் காட்ட சிறிது நேரம் வழங்கி அதன்பின் கைது செய்வதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது. ஆனால் மக்கள் சிறிது சிறிதாக வர ஆரம்பித்தவுடன் தலைவர்கள் வருவதற்கு முன்பே மக்களை இழுத்துச் சென்றதும், பாஷை தெரியாத வெளி மாநிலப் படைகளை குவித்தும், உத்தரவிடவேண்டிய அதிகாரிகளே ஒரு கான்ஸ்டபிள் தரத்திற்கு இறங்கி தடியடி நடத்தியதும் ஒட்டு மொத்த மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டதுதான்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாகனங்களை சேதப்படுத்தவில்லை. கல்வீசி போலீஸைத் தாக்கவில்லை. தலைவர்கள் வந்தபிறகுதான் கைதாவோம் என்று கூறியது தடியடிக்குரிய காரணம் இல்லை. முதல்வர் கூட்டிய அதிகாரிகள் மாநாட்டுக்குப் பின்னர் இரண்டு தடவை வன்முறை ஏற்பட்டுள்ளது. இவர்கள் எதற்கெடுத்தாலும் போராட்டம் – முற்றுகை என்று கிளம்பி விடுகிறார்கள். எனவே இனிமேல் இது போன்ற சமயங்களில் நையப்புடைத்து விரட்டவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
ஆனால் அல்லாஹ் இவர்களின் சதித் திட்டத்திற்கு படுதோல்வியை அளித்தான். தடியடிக்குப் பிறகு அந்த இடம் மயானமாகக் காட்சி தரும். அதைப்பார்த்தால் எவருக்கும் போராட்டம் நடத்த துணிவு வராது. ஆனால் 200 நபர்கள் வந்தவுடன் தடியடி நடத்த ஆரம்பித்த காவல்துறை, எதற்கும் அசையாமல் உறுதியாக ஆண்களும் பெண்களும் நின்றதைப் பார்த்து பின் வாங்கினார்கள். மேலும் இச்செய்தியறிந்து அங்கு இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குழுமினார்கள்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை வெறியாட்டம்:
கடந்த 22.12.12 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின்போது முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்பது ஏதோ எதேச்சையாக நடந்தது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது.
இந்த போராட்டத்தில் முஸ்லிம்களை திட்டமிட்டு கருவறுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிய காவல்துறை செய்த திட்டமிட்ட சதிச் செயல்தான் இந்த காட்டு மிராண்டித் தனமான தடியடித் தாக்குதல்.
ஆம்! போராட்டம் துவங்குவதற்கு முன்பே போராட்ட க்களத்தில் எண்ணற்ற போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். நமது சகோதரர்களில் சிலர் அந்த போலீசாரை கவனித்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த பெரும்பாலான போலீசார் தங்களது சீருடையில் அவர்கள் பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜுகள் இல்லாமல் தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டாத திருடர்கள் போல காட்சி தந்துள்ளனர். சுருங்கச் சொல்வதாக இருந்தால் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திருடர்களாகவே போலீசார் மாறியுள்ளனர்.
தடியடி நடத்தும்போது தாங்கள் யார் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அயோக்கியத்தனமான வேலையை போலீசார் செய்துள்ளார்கள் என்பது தடியடிக்குப் பிறகுதான் நமக்குத் தெரிய வந்தது.
அதற்கு முன்பாகவே சுதாரித்துக் கொண்ட நமது சகோதரர்கள் போலீசார் தங்களது பெயர்கள் பதித்த பேட்ஜு இல்லாமல் நின்றிருந்ததை படம் பிடித்தனர். அந்த புகைப்படங்கள் இதோ:
இதன் மூலம் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்று முன்கூட்டியே இவர்கள் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 21.12.12 வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 2.30 மணிக்கு நமது நிர்வாகிகளது வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த காவல்துறையினர் நமது தென்சென்னை மாவட்டத்தலைவர் அப்துர்ரஹீம் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர் குடியிருக்கக்கூடிய வீட்டு உரிமையாளரை நள்ளிரவில் எழுப்பி, “தீவிரவாதிகளுக்கெல்லாம் ஏன் வீடு வாடகைக்கு விடுகின்றாய்? என்று கேட்டு இஸ்லாமிய சமுதாயத்தையே தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட துணைச் செயலாளருடைய வீட்டு காம்பவுண்டுக்கு வெளியில் செருப்புகள் அதிகமாகக் கிடந்ததைப் பார்த்த இந்தக் காவித்துறையினர், “இவ்வளவு செருப்புக்கள் வெளியில் கிடக்கின்றதே! இது என்ன வீடா? அல்லது வேற எதுவும் தொழில் செய்யும் இடமா?” என்று கேட்டுள்ளனர். மேலும் நமது சகோதரிகளிடத்திலிருந்த இரண்டு செல்போன்களையும் பிடுங்கிச் சென்றுள்ளனர். செல்ஃபோன்களை பிடுங்கிச் சென்றதன் மூலம் போலீசார் ராக் கொள்ளையர்களாக மாறியுள்ளனர்.
உலகம் அழியப்போகின்றது என்று சொல்லி மக்களுக்கு பீதியுண்டாக்கியவர்களை கைது செய்யத் துப்பில்லாத காவல்துறையினர் அந்த பீதியை போக்கும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நமது சகோதரர்கள் வீடுகளில் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து காவி விஷம் கக்கியுள்ளதை பார்க்கும்போது, முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்ற வெறியோடு திட்டமிட்டு களம் இறங்கியுள்ளது புலப்படுகின்றது.
காவல்துறையின் வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்டோர் :
தடியடியின்போது குன்றத்தூர் அப்துல்காதர் என்ற சகோதரருக்கு முகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது காவல்துறை,
திருவள்ளூரைச் சேர்ந்த 60 வயது முதியவரான நாசர் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதில் அவரது கை உடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் கால் ஊனமுற்ற சகோதரரான நந்தனம் பகுதியைச் சேர்ந்த அன்வர் அவர்களை முகத்தில் தாக்கியது இந்த காவல்துறை.
இவர்களது இந்த வெறியாட்டத்திற்கு 8வயது சிறுவனும் விதிவிலக்கல்ல. போராட்டத்தில் பங்கு கொண்ட 8வயது சிறுவனை மண்டையில் தாக்கி அவனது மண்டையை உடைத்து அராஜகம் புரிந்துள்ளனர்.
இனிமேல் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களில் தடியடி நடத்துவது என்று எடுக்கப்பட்டுள்ள முடிவை முறியடிக்க வரும் சனிக்கிழமை (29.12.2012) மிகப் பெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை டிஎன்டிஜே அறிவித்துள்ளது. சம்பந்ததப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தொய்வில்லாத தொடர்போராட்டத்தையும் மாநிலத் தலைமை அன்று அறிவிக்க உள்ளது.